பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 199



என்று கூறும் கருத்தமைந்த பாட்டில், செங்குவன் கடலிற் பகைவர் மேல் வேலெறிந்து அவர் பிறக்கிடச் செய்த திறத்தைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இவ்வாற்றால் செங்குட்டுவனுக்குக் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்று பெயர் பிறங்குவதாயிற்று.

இவ் வண்ணம் செங்குட்டுவன், தான் கடல் பிறக்கோட்டிய சிறப்பைச் சான்றோர் பரவ இனிது இருந்து வரும் நாளில், தென் பாண்டி நாட்டில் அவன் மன அமைதியைக் கெடுக்கும் செயலொன்று நிகழ்ந்தது. மதுரை மாவட்டத்து மோகூர்[1] என்னும் ஊரில் பழையன் என்னும் தலைவன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் காவிரி நாட்டுப்போர் என்னும் ஊர்க்குரிய பழையன் என்பான் வழிவந்தான். போர்ப் பழையன், சோழர்க் குரியனாய், செங்குட்டுவனால் நேரிவாயிலில் அலைத்து வருத்தப்பட்ட சோழர் ஒன்பதின்மர்க்குத் துணைவனாய் நின்று வரிசை யிழந்தான். அதனால் அவற்குச் சேரன் செங்குட்டுவன் பால் மனத்தே பகைமை உண்டாயிருந்தது. அன்றியும், தென்பாண்டி நாட்டு அறுகை செங்குட்டுவற்குத் துணை செய்தது, பழையன் உள்ளத்தில் அவ்வறுகையாலும் பகைமை பிறப்பித்தது.

அறுகை யென்பான் இருந்த ஊர் குன்றத்தூர் என்பது. அவற்குப்பின் அவ்வூர் அறுகை குன்றத்தூர் என்று வழங்குவதாயிற்று. இடைக்காலத்தே, அப்


  1. மோகூரும் பழையன் பெயரால் உண்டான பழையானூரும் மாற நாட்டில் இன்றும் உள்ளன.