பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 203



சுற்றத்தாரும் தண்டமிழாசானாகிய சாத்தனாரும் வந்திருந்தனர். அவ்விடம், நேரிமலையின் அடியில் பேரியாற்றங்கரையில், இப்போது உள்ள நேரிமங்கலம் என்னும் இடமாகும். இன்றும் அங்கே இடிந்து பாழ்பட்டுப்போன அரண்மனைக் கட்டிடங்கள் உள்ளன எனத் திருவாங்கூர் நாட்டியல் நூல்[1] கூறுகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தின் ஒரு கிளை அங்கே இருந்தது என அங்கு வாழ்பவர் கூறுகின்றனர்.

சேரமான் வந்திருப்பதை அறிந்த மலைவாணர் மலைபடு செல்வங்களான யானைக்கோடு, அகில், மான்மயிர்க் கவரி, மதுக்குடம், சந்தனக்கட்டை முதலிய பலவற்றைக் கொணர்ந்து தந்து, கண்ணகி போந்து வேங்கை மரத்தின் கீழ் நின்று விண்புக்கதைத் தாம் கண்டவாறே வேந்தர்க்கு எடுத்துரைத்தனர். உடனிருந்த சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை எடுத்து உரைத்தார். அது கேட்டு மனம் வருந்திய செங்குட்டுவன், தன் மனைவியை நோக்கி, “பாண்டியன் மனைவியான கோப்பெருந்தேவியோ கண்ணகியோ, நின்னால் வியக்கப்படும் நலமுடையோர் யாவர்?” என்று வினவி காணாது கழிந்த மாதராகிய கண்ணகியார் வானத்துப் பெருந்திருவுறுக; அது நிற்க, நம் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று தெரிவித்தாள். கேட்ட வேந்தன் சாத்தனாரை நோக்க, அவரும் அதுவே தக்கது எனத் தலையசைத்தார்.


  1. Travancore State Manual Voi. iv. p. 223.