பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204 சேர மன்னர் வரலாறு



பின்னர், வேந்தன், பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் உருவம் சமைத்தற்குக் கல் வேண்டும் என அரசியற் சுற்றத்தாரை ஆராய்ந்தான். முடிவில் இமயத்தினின்றும், கல் கொணர்வதே செயற்பாலது எனத் துணிந்தனர்.

பின்னர், வேந்தர் பெருமானான செங்குட்டுவன் மலைவளம் கண்டு மகிழ்ச்சி கொண்டு வஞ்சிமா நகருக்குத் திரும்பிப்போந்து, இமயம் சேறற்கு வேண்டும் செயல் முறைகளைச் செய்யலுற்றான். இதற்கிடையே வடநாட்டில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. சேரநாட்டுக்கு வடக்கெல்லையாக விளங்கும் வானவாசி (Banavasse) நாட்டில் நூற்றுவர் கன்னர் (Satakarni) என்பார் ஆட்சி புரிந்துவந்தனர்.[1] இச் செய்தியை வானவாசி நகரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் உரைக்கின்றன. அவர்கள் பெயரடியாகத்தான் புன்னாடு[2] என முன்னாளில் வழங்கிய அப் பகுதி கன்னட நாடு எனப்படுவதாயிற்று; அவர் வழங்கும் திராவிட மொழியும் கன்னட மொழி எனப் பெயர் பெறுவதாயிற்று. சேர வேந்தர் வானவரம்பராகிப் பின் இமயவரம்பரான காலமுதல், அந்நூற்றுவர் கன்னர் சேரரோடு நண்பர்களாகவே இருந்தனர். அவர்கட்கு வடக்கில் இருந்த கடம்பரும் பிற ஆரிய வேந்தரும் சேரர்பால் அழுக்காறும் மனக்காய்ச்சலும் கொண்டிருந்தனர். அந்த மன்னர் ஒரு கால் திருமணத்திற் கூடிவேட்டுப் புகன்றெழுந்து, மின் தவழும் இமய


  1. Bombay Gazetteer: Kanara. part ii p. 178.
  2. Punnata of Ptolemy M. Crindle P.72. Robert Sewell’s Antiquities. p. 226. Heritage of karnataka. p. 6. அகம். 396