பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 213



பின்பு, சேரலாதன் அவர்கட்கு நட்பருளி, அவரது துணைமை பெற்று, வடவாரியரைத் துணைக்கொண்டு தன்னொடு பொரற்குவந்த சதகன்னருடன் பெரும்போர் உடற்றினான். களிறும் குதிரையும் தேரும் வீரரும் கூடிய தமிழ்ப் படை, வடவர் தானையை வென்று வெருட்டிற்று. தமிழ் மறவர் தங்கள் மெய்புதை அரணம் கிழிந்தொழிந்ததை நினையாமல் தும்பை சூடிப் பொருதழித்தனர். எண்ணிறந்த வீரர் துறக்கம் புகுந்தனர். முடிவில் சேரலாதன் தானை, வான்வாசி நாட்டுட் புகுந்து அங்கேயே பாடிவீடு அமைத்து நின்றது. பகைவர் பலரும் புறந்தந்து ஓடினர். ஆற்றாத சதகன்னருட் சிலர் அடிபணிந்து அருங்கலம் பல தந்து, எம்மை அருளுக என வேண்டினர். சேரலாதன் அவர்கட்கு அருள் செய்து, பண்டு போல் வானவரம்பை நிலைநாட்டி, அவர்களையும் எல்லை கடவாது காக்குமாறு பணித்துவிட்டுத் திரும்பலானான். அதனால் சேரலாதனைச் சான்றோர் வானவரம்பன் என்று பாராட்டினர். இது நிலைபெறுமாறு, அந்நாட்டுப் பார்ப்பனரைக்கொண்டு பெருவேள்வி செய்து, அவர்கட்குக் குடநாட்டில் ஓர் ஊரையும் கொடுத்தான். இது பற்றியே பதிகமும் “பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, வானவரம்பன் எனப் பேரினிது விளக்கி” என்று கூறுவதாயிற்று.

வானவரம்பன் என்ற பேர் இனிது விளக்கிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வஞ்சிநகர் போந்து இனி திருக்கோயில், கிழக்கில் கொல்லிமலைக்கும் காவிரிக்கும் இடையிலுள்ள நாட்டில் வாழ்ந்த மழவர் என்பார்,