பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 சேர மன்னர் வரலாறு



10. செல்வக் கடுங்கோ வாழியாதன்

பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு, குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது. பொன்னானி வட்டத்தில் உள்ள இரும்பொறை நல்லூர், வடக்கில் குறும்பர் நாடு முதல் தெற்கில் பொன்னானி வட்டம் வரையில் பொறை நாடு பரந்திருந்தமைக்குச் சான்று பகர்கிறது. மேலும், இந் நாடு கிழக்கிற் கொங்கு நாட்டில் பூவானியாறு வரையிற் பரந்திருந்தது. பவானிக் கருகில் காவிரியோடு கலக்கும் பூவானி யாறும், அவினாசி வட்டத்திலுள்ள இரும்பொறை யென்னும் ஊரும் பொறை நாட்டின் பரப்புக்கு வரம்பு காட்டுகின்றன.

இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம் என்றோர் மூதூரும் உண்டு. அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு ‘ வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால், மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால் அவர்கள் வழங்கப்பெற்றனர். மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று[1]. தொண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் இரும் பொறை என வழங்கப்பெற்றனர். வள்ளுவ நாட்டுப் பகுதியில் இருந்த ஒரு கிளையினர் கடுங்கோ


  1. குறுந். 166.