பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக் கடுங்கோ வாழியாதன் 223



எனப்பட்டனர். இவர்களின் வேறாகக் குட்டுவர், குடக்கோ என இரு கிளை யுண்டென்பது முன்பே கூறப்பட்டது. இவற்றோடு தொடர்புடைமை தோன்றக் குடக்கோச் சேரமான், குட்டுவன் சேரல் இரும்பொறை என்றும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்றும் பிறவாறும் கூறிக் கொள்வது மரபு.

இவ் வேந்தர்கள், இமயவரம்பன் நெடுஞ்சேராதன் காலத்துக்கு முன்பிருந்தே , சேர நாட்டில் இருந்து வரும் தொன்மையுடையராவர், மாந்தரஞ்சேரர்களுள் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவன் மிக்க பழையோனாகக் காணப்படுகின்றான். செங்குட்டுவன் காலத்தில் விளங்கிய பரணர் என்னும் சான்றோரால், இம் மாந்தரம் பொறையன் இறந்த காலத்தில் வைத்துக் குறிக்கப்படும் கின்றான்; அதுவே இதற்குப் போதிய சான்றாகிறது.

இந்த மாந்தரன், உயர்ந்தோர் பரவும் ஒள்ளிய குணம் படைத்தவன். அப் பகுதியில், அவன் காலத்தில் விளங்கிய வேந்தருள், அவனே மேலோனாகக் கருதப் பட்டான். நிறையருந் தானையும் பெருங்கொடை வன்மையும் அவன்பால் சிறந்து விளங்கின. இவனைப் பாடிச் சென்ற இரவலர் பெரும் பொருளும் பெரு மகிழ்ச்சியும் கொண்டே திரும்புவர். ‘மந்திரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம் போல உவ இனி வாழி நெஞ்சே[1]’ என்று பரணர் பாராட்டிக் கூறுகின்றனர். இவனது ஆட்சியில், மழை வளம் தப்பாவாறு நாளும் கோளும் உரிய


  1. அகம். 142.