பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 சேர மன்னர் வரலாறு



மெலிந்திருந்தார். அவரைக் கண்ட அறிஞர் சிலர், “சான்றீர், நீர் சென்று கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் காண்பீ ராயின், நமது உடம்பைப் பெறுகுவீர்” என மொழிந்தனர் அரசன் பார்வையும் ஒருவகை மருந்தாம் என்பது மேனாட்டவர்க்கும் உடன்பாடு. அரசர் பார்வையால் நோய் நீங்கப்பெற்ற செய்தி கிரேக்க நாட்டு வரலாறுகளிலும் உண்டு.

அவர்கள் சொல்லிய வண்ணமே, அப் புலவர் பெருமானும் கருவூர் அடைந்து வேந்தனைக் கண்டு தம் நோய் நீங்கப்பெற்றார்; சின்னாட்களில் தமது பண்டைய உடல் நிலையையும் எய்தினார். வேந்தருடைய பார்வை நலத்தை வியந்து, “மானினம் போல் யானையினம் பெருகியுள்ள கானகநாடன் நீதானோ? நீயாயின்[1] நீ செய்த உதவிக்கு ஒன்று கூறுவேன்; அரசாளும் செல்வம் ஒருவர் பெறுதற்கு அரியது; அரசு செய்தற்கண் அருளும் அன்பும் இல்லாத செயல்கள் உண்டாதல் இயல்பு. ஆனால், அவற்றைச் செய்வோர் நிரயத் துன்பம் எய்துவர்; நீ அவர்களோடு கூடுதல் ஆகாது. நின் அரசியற் றோற்றம் என்போல்வார்க்கு மருந்தாய் நலஞ் செய்வது ஆகையால், நீ தீயரோடு கூடாமல், அரசு காவலைக் ‘குழவி கொள்பவரின் ஓம்புமதி’ என்று இனிய சொற்களால் எடுத்துரைத்தார்.

வேந்தன், அவர் மனம் மகிழத் தக்க வகையில் மிக்க பரிசில்களை வழங்கினான். அவர் அவற்றை ஏற்றுக்


  1. யாரைக் கண்டால் யான் உடம்பு பெறலாம் எனச் சான்றோர், கூறினரோ அவன் நீயாயின என்பது குறிப்பு. புறம் 5.