பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 சேர மன்னர் வரலாறு



இறந்தான். செங்குட்டுவனுக்கு உடன் பிறந்த இளவலான குட்டுவன் இளங்கோ அரசு துறந்து குணவாயிற் கோட்டத்தே இருந்து தண்டமிழ் ஆசானான சாத்தனார் உரைத்த கோவலன் கண்ணகிகளின் வரலாறு கேட்டுத் தமிழகம் முழுவதும் சென்று ஆங்காங்குள்ள இயற்கை நலங்களை நேரிற் கண்டு சிலப்பதிகாரம் என்ற நூலைச் செய்து தமிழகத்துக்கு அளித்துவிட்டு மறைந்தார். இவ்வாறு குட்டுவர் குடி வழியற்றுப் போகவே, பொறையர் குடியிற் சிறந்து விளங்கிய கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்குப்பின் அந்துவஞ்சேரல் இரும்பொறை யென்பான் சேரவரசுக்கு உரியனானான்.

அந்துவன், நுண்ணிய நூல்பல கற்றும் கேட்டும் சான்றோர் பரவும் நல்லிசைப் புலமை சிறந்து விளங்கி னான். திருப்பரங்குன்றத்து முருகன்பால் அவனுக்கு அன்பு மிகுந்தது. ஒருகால், அவன் திருப்பரங்குன்றம் போந்து முருகனை வழிபட்டு அவரது பரங்குன்றைத் தமிழ்நலம் கனியப் பாடினன். “முருகன் சூர் முதல் தடிந்த சுடர் நெடுவேல் ஏந்துபவன்; பரங்குன்றம் அம் முருக வேட்கேயுரியது; சந்தன மரங்கள் செறிந்து நறுமணம் கமழ்வது; அதன்கண் உள்ள இனிய உள்ள இனிய சுனைகளிற் பூத்திருக்கும் செங்கழுநீர், மகளிர் விருபித் தங்கள் கருங்குழலில் சூடிக்கொள்ளும் கவின் மிகுந்தது. இவ்வாறு மணம் கமழும் மரங்களாலும் சுனைப் பூக்களாலும் தண்ணிதாய் விளங்கும் தண்பரங்குன்றம், அந்துவன் பாடிய செந்தமிழ் நலமுடையது” என்று