பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 233



அரசன்பால் உளதாகிய இயற்கை யன்பால் உள்ளம் கலங்கி அவலித்து உரைத்த மோசியாரின் மொழிகள் சேரமான் மனத்தைக் கலக்கி விட்டன. உடனே அவன் யானைமேல் இருப்பான் தனக்குப் பகைவன் என்பதை மறந்தான்; தன் நகர்க்கண் அவன் வந்து முற்றியிருப்பதையும் மறந்தான். காற்றினும் கடுகச் சென்று களிற்றின் பாய்ந்து அதன் செருக்கை அடக்கிச் சோழனை உய்வித்து மீண்டான். சேரமான் வந்ததும், களிற்றை அடக்கியதும், சோழ வேந்தனை உய்வித்து மீண்டதும் இருபடைத் தலைவர்களையும் மருள் வைத்தான். முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி சேரமானுடைய அறந்திறம்பா மறமாண்பை வியந்து பகைமை யொழிந்து நட்பால் பிணிப்புண்டான். இச் செயலால் “மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சான்றோர் பாராட்டினர். “மடியா உள்ளம்” என்றும், “மாற்றோர்ப் பிணித்த” என்றும் நின்ற சொற்குறிப்புகள் இவ் வரலாற்றை அகத்தே கொண்டிருப்பதே நோக்கத் தக்கது. படைமறவர், “அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை” என்பதை உணர்ந்து இன்பமெய்தினர். இச் செயல் தழிஞ்சித் துறையாய்த் தமிழ் மறவர்க்குப் பொதுப்பண்பாய் இருந்தமையின், இந் நிகழ்ச்சி சிறப்பான விளக்கம் பெறவில்லை. ஏனை நாட்டவரிடையே இது நிகழ்ந் திருப்பின், நாடெங்கும் இவ் வரலாறு பரப்பப் பெற் றிருக்கும். இடைக் காலத்தே தமிழர் மறந்து அறிவு அறைபோகி அடிமை யிருளில் வீழ்ந்தமையால் இது