பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 சேர மன்னர் வரலாறு



போலவும் புகழ்க் கூறுகள் பலவற்றை அறியா தொழிந்தனர்.

அந்துவஞ் சேரலுக்குப் பொறையன்தேவிபால் ஒரு மகன் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற பெயருடன் விளங்கினான். அவன் இளமை முதலே சான்றோரிடையே பழகிப் பயின்றான். அதனால், உயர்ந்தோரிடத்துப் பணிவும், நண்பரிடத்தில் அன்பும் கொண்டு, அவர் மனம் வருந்தாவாறு அஞ்சித் தன்னைக் காத்தொழுகும் நற்பண்பும், காதல் மகளிர்க் கல்லது தன் மார்பு காட்டாத மறமும், நிலம் பெயரினும் சொல் பெயராத வாய்மையும் இயல்பாகக் கொண்டிருந்தான். பெரியோரைத் துணை கொண்டு அவர் உவக்குமாறு வணங்கும் மென்மையும், எத்தகைய பெரியராயினும் பகைவரைக் கண்டு அஞ்சி வணங்கி வாழ்வதைக் கனவிலும் கருதாத ஆண்மையும் அவன் குணஞ்செயல் களில் மிக்குத் தோன்றின. பகைமையுள்ளத்தால் மாற்றவர் கூறும் புறஞ்சொற்களைச் சிறிதும் கேளாத அவனது பொறைக்குணம் சான்றோர் பாடும் சால்பு மிகுந்து விளங்கிற்று.

பண்டை நாளில், தங்கள் நாட்டிலும் குடியிலும் தோன்றி, அறநெறியிலும் மற்ற நெறியிலும் சான்றாண்மை குன்றாது ஒழுகிப் புகழ் கொண்டு உயர்ந்து விண்ணுலகு அடைந்தவர்களை நினைந்து பாராட்டி விழா அயர்வது தமிழ் வேந்தர் இயல்பு அன்றோ ? அது சேர வேந்தர்பால் சிறந்து திகழ்ந்தது. அக் காலை, தம் முன்னோர்களுடைய புகழ் பொருந்திய வரலாற்றைப் புலவர் பாடக் கேட்டு மகிழ்வதும், பாணர் பாட்டில் இசைக்கக் கூத்தர்