பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 237



வண்ணம் இருந்தது. இவ்வாறு உழிஞை சூடிய தமிழ்ப் படையைச் செலுத்திக் குன்றுகளைத் தகர்க்கும் இடிபோற் சீறிப் பகைவர் அரண்களைக் கொள்ளுதற்குச் செல்வக் கடுங்கோ செவ்வி நோக்கி இருந்தானாக, வடவேந்தர் இருவரும் இரவோடு இரவாய்த் தம்பால் இருந்த பொருள்களையெல்லாம் கைவிட்டு ஓடி விட்டனர். செருச் செய்தற்கு மிக்குநின்ற தமிழ்ப்படை அப் பொருள்களை மிகைபடக் கவர்ந்து கொண்டு வாகை சூடித் திரும்பிற்று. இதுபற்றி, அத் தானை, “ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள் செருமிகு தானை[1]” என்று கபிலர் முதலிய சான்றோர் பாடும் சால்பு பெற்றது. முற்றிய நகர்க்கண் இருந்த பகைவீரர் பலர், மனம் மாறிச் சேரமானை அடைந்து, “வேந்தே, யாம் இனிதின் கருத்தின்படியே ஒழுகுவோம்; எம்மை ஏற்றருள்க” எனப் புகலடைந்தனர். கடுங்கோவும் அவர்கள் பால் கண்ணோடி அன்பாற் பிணிந்து அவர்கள் செய்த சூளுறவை ஏற்றுக் கொண்டான். அவர்களும் வாய்மை தப்பாது ஒழுகி மறமாண்பு பெற்றனர்.

வடபுலத்துப் பகைவர்கள் அவ்வப்போது புகுந்து செய்த அரம்புகளால் சீரழிந்த இடங்களில், பல உயர்குடியினர் தளர்ந்து சூட்ட நாட்டிலும் பொறை நாட்டிலும் குடிபுகுந்து வருந்தினர். அவர்கள் பால் அருள் பெருகிய சேரமான், நாட்டில் அவர்கள் இனிது வாழ்தற்கென ஊர்களை ஏற்படுத்தி, அவர்கட்கு


  1. பதிற். 63.