பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 சேர மன்னர் வரலாறு



அந் நிலையை உண்டுபண்ணிப் பகைவர்கள் இருந்த இடம் தெரியாதபடிப் பொருது அவர்களை வேரோடும் கெடுத்தான். இச் செயலை இவனைப்பற்றிக் கூறும் பதிகம், “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி வெருவரு தானைகொடு செருப் பல கடந்து” சிறப்புற்றான் எனப் பாராட்டிக் கூறுகின்றது.

செல்வக்கடுக்கோ வாழியாதன், இவ்வாறு போர்த் துறையில் மேன்மை எய்தியதற்கு இவனது படைப் பெருமையே சிறந்த காரணமாகும். யானைப் படையிலுள்ள வீரர்கள், அவற்றின் பிடரியிலிருந்து கழுத்துக் கயிற்றிடைத் தொடுத்த தம் காலால் தம்முடைய குறிப்பை யுணர்த்தித் தாம் கருதிய வினையை முடித்துக் கொள்ளும் சால்புடையராவர் குதிரை மறவர் தம் காலடியில் அணிந்த இருப்பு விளிம்பால் தமது கருத்தைக் குதிரைகட்கு உணர்த்திப் போர்க்களத்தில் பகைவர் இருக்குமிடம் தெரிந்து செலுத்தி வெறி கொள்ளும் திறல் வாய்ந்தவர். வேலேந்தும் வீரர் கல்லொடு பொருது பயின்ற வலிய தோளையுடையர். அவர்களும் பனங்குருத்துகளோடு குவளைப்பூ விரவித் தொடுத்த கண்ணி சூடி மதம் செருக்கித் திகழ்வர்[1] போர் யானைகளின் மேல் வானளாவ உயர்ந்திருக்கும் கொடிகள், மலையினின்று வீழும் அருவி போலக் காட்சி நல்கும். அவற்றின் முதுகின் மேல் கட்டப்பெற்றிருக்கும் முரசுகள், காற்றால் அலைப்புண்ட கடல் போல் முழக்கம் செய்யும்.


  1. பதிற். 69.