பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக் கடுங்கோ வாழியாதன் 239


போர்க்களத்திற் பகைவர்மேற் பாய்ந்தோட உயர்ந்த குதிரைப் படையும், எறிந்து சிதைந்த வேலேந்தும் வேற்படையும், பன்முறையும் போர் செய்து பயின்ற வீரர் திரளுமே பகைவர் படைக்கடலைக் கலக்கி மலைபோற் பிணங்கள் குவியப் பொருது அழிக்கும் பொற்பு வாய்ந்தன எனப் புலவர் பாடிப் புகழ்ந்துள்ளார்.

உழிஞைப் போர் செய்யுங்கால், கடுங்கோவின் படைமறவர், “இந்த மதிலை எறிந்த பின்னன்றி உணவு கொள்வதில்லை” என வஞ்சினங் கூறி அச் சொல் தப்பா வண்ணம் நாள் பல கழியினும் உண்ணாமேயிருந்து பொரும் பெரிய மனவெழுச்சியுடையர். இவ்வாறே பகைவர் உறையும் ஊர்களையும் நாடுகளையும் கைக் கொண்டாலன்றி உறங்கோம் என உறுதி கொண்டு பன்னாள் உறக்கத்தையும் விட்டொழுகுவர். படைத் தலைவர்களின் உடம்பை நோக்கின், அது போர்ப்புண் வடு நிறைந்து இறைச்சி விற்பார் இறைச்சியை வெட்டுதற்குக் கீழே வைத்துக் கொள்ளும் அடிமணை போலக் காணப்படும்; அவ் வடு தோன்றாதபடி நறிய சந்தனம் பூசிக்கொள்வது அவரது மரபு.

இனி, அறத்துறையிலும் இச் சேரமான் சிறந்து விளங்கினான். மறத்துறையில் களவேள்வி செய்தது போல், அறத்துறையில் அந்தணர் பலரைக் கொண்டு மறை வேள்விகள் பல செய்தான். திருமால் பால் பேரன்பு கொண்டு அவனைத் தன் மனத்தின்கண் வைத்து வழிபட்டான். திருமால் கோயில் வழிப்பாட்டுக்கென ஒகத்தூர் என்னும் நெல்வளம் சிறந்த ஊரை இறையிலி முற்றூட்டாக நல்கினான். இவன் அறநூல் வல்ல