பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 சேர மன்னர் வரலாறு



நிரம்பத் தந்து மகிழ்வித்தான். அவன் செயலைக் கண்ட ஆதனார் வியப்பு மிகுந்து, “பூழியர் பெருமகனான எங்கள் செல்வக் கடுங்கோ , வஞ்சி நகரின் புறநிலை அலைக்கும் பொருநை யாற்று மணலினும், அங்குள்ள ஊர்கள் பலவற்றினும் விளையும் நென்மணியினும் பல்லூழி வாழி[1]” என்று வாழ்த்திய பாட்டொன்றைப் பாடி அவன்பால் விடை பெற்றுச் சென்றார்.

அக் காலத்தே, பாண்டி நாட்டின் வடபகுதியில் உற்ற பறம்பு நாட்டின் தலைவனான வேள்பாரிக்கு உயிர்த் தோழராக விளங்கிய கபிலர் என்னும் சான்றோர், அப் பாரி இறந்ததனால், அவனுடைய மகளிர் இருவரையும் மணஞ்செய்து தர வேண்டிய கடமையைத் தான் ஏற்றுக் கொண்டு, பாரி மகளிரை. மணந்து கொள்ளுமாறு சில வேந்தர்களை வேண்டினர். அவர்கள் மறுக்கவே, கபிலர், அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவலூர்க்குச் சென்று பார்ப்பாரிடையே அவர்களை அடைக்கலப்படுத்தி அரசிளஞ் செம்மல்களை நாடிச் சென்றார். பார்ப் பார்க்கும் அவர்களுடைய பொருட்கும் யாரும் தீங்கும் செய்வது இல்லையாதலால், கபிலர் பாரி மகளிரை அவரிடம் அடைக்கலப்படுத்தினார்.

அப்போழ்து, அவர் சேரநாட்டு வேந்தனான செல்வக் கடுங்கோ, வாழியாதன் சிறப்பைச் சான்றோர் சிலர் எடுத்தோதக் கேட்டு, அவனது சேர நாடு அடைந்தார். அந் நாளில் வாழ்ந்த நல்லிசைச் சான்றோருள்,


  1. புறம். 387.