பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 சேர மன்னர் வரலாறு



வந்தோர் பலருக்கும் விடை கொடுத்த கடுங்கோ - கபிலரை மட்டும் தன்னோடே இருத்திக் கொண்டான். இருந்து வருகையில் ஒருநாள், தான் வந்த வினைத் திறத்தைக் கூறலுற்று, “சான்றீர், என் நாட்டவர்க்குக் கடலும் மலையும் காடும் நின்று போதிய இடம் நல்காமையால், சிறிதாயிருக்கும் அதனை விரிவு செய்தல் வேண்டி இந் நாட்டிற்கு வந்தேன்; இங்கே இடம் பெற்றிருந்த வேந்தர் இந் நிலம் எல்லோர்க்கும் பொது என்று சொல்லிப் போர் தொடுத்தனர். அது பொறாது இவ் வினையை மேற்கொண்டு வருவது கடனாயிற்று” என்று சொல்லி வினைக்கு ஆவன செய்யலுற்றான். கபிலர் வினை வேண்டுமிடத்து அறிவு உதவி வந்தார். இரண்டொரு நாட்குப்பின் ஒரு நாள் வெயில் வெம்மை மிகுதியாக இருந்தது. அதனைப் பொறாமல் கபிலர் வெதும்புவதைக் கடுங்கோ கண்டு விளையாட்டாகச் “சான்றீர், இவ் வெயில் என்னைப் போல் வெம்மை செய்கிறதன்றோ ?'’ என்றான். “வேந்தே, இந்த ஞாயிறு நின்னைப் போல்வது என்றற்கு என் நா இசையாது; இதன் பால் பல குறைகள் உண்டு” என்று சொல்லி, ஞாயிற்றை நோக்கி, “இடம் சிறிது என்ற ஊக்கத்தாலும், போகம் வேண்டியும், நிலம் எல்லார்க்கும் பொது என்னும் சொல் வலியுடையார்க்கு ஏலாது என் கொள்கையாலும் அறப்போர் புரியும் தானையை யுடைய எங்கள் சேரர் பெருமானை, ஏ, ஞாயிற்றே! நீ எவ்வாறு ஒத்தல் கூடும்? நீ பொழுது வரையறுக்கின்றாய், புறங்காட்டி மறைகின்றாய்; நாடோறும் பொழுது தோறும் மாறி மாறி வருவாய்; மாலைப் போதில்