பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 257



புகழைப் பெற்றான். அங்கேயே அவன் பள்ளிப் படுக்கப் பட்டதனால், பின் வந்த சான்றோர், அவனை, சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று சிறப்பித்தனர். அந்தச் சிக்கல் என்னும் இடம், இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோச மங்கைப் பகுதியில் உள்ளது.

சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு அரசு வீற்றிருந்தான். என்று பதிகம் கூறுகிறது.


11. தகடூர் எறிந்த பெருஞ்சேரல்

இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் சிக்கற்பள்ளியில் துஞ்சிய காலத்தில் சேரவரசு கொங்கு நாட்டில் பரத்திருந்தது. அதற்குக் கொங்கு வஞ்சியென்னும் பேரூர் தலைநகராக விளங்கியதும் இடைக்காலத்தே கொங்கு வஞ்சி தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழர் கைப்பட்ட போது இராசராசபுரம் என்று பெயர் பெற்று இந் நாளில் தாராபுரம் என மருவிற்றென்பதும் முன்பே கூறப்பட்டன.

அக் காலத்தே கொங்கு நாட்டின் வடக்கில் புன்னாடும், எருமை நாடும்[1], கிழக்கில் தொண்டை நாடும் சோழ நாடும், தெற்கிலும் மேற்கிலும் சேர நாடும்


  1. எருமை நாடு எறாமையூரைத் தலைநகரமாகக் கொண்ட நாடு, எருமை வடமொழியில் மகிஷம் எனப்படும்; மகிஷவூர் பின்பு மைசூர் எனச் சிதைந்து விட்டது.