பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 சேர மன்னர் வரலாறு



எல்லையாக விளங்கின. கோயம்புத்தூர்ப் பகுதி மீகொங்கு நாடு என்றும், குளித்தலையும் அதன் தென்மேற்குப் பகுதியும் கீழ் கொங்கு நாடென்றும், சேலம் பகுதி வடகொங்கு நாடு என்றும்[1] வழங்கின. பின்பு மைசூர் நாடும் அதனைச் சேர்ந்த கோலார் நாடும் சேலம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்து கங்க நாடெனப் பெயர் பெற்றன[2] , சேலம் பகுதியின் எஞ்சிய பகுதி முற்றும் கொங்கு நாடாகவே விளங்கிற்று. நாமக்கல்லிலுள்ள பழமையான கல்வெட்டொன்று அது வடகொங்கு நாட்டைச் சேர்ந்ததெனக் குறிக்கின்றது [3] .

இக் கொங்கு நாடு முற்றும் காடும் மேடும் நிறைந்து முல்லை வளமே சிறந்திருந்ததனால், இங்கே வாழ்ந்தவர் பெரும்பாலும் ஆடு மாடு மேய்க்கும் ஆயராகவே இருந்தனர். இது பற்றியே சான்றோர் கொங்கு நாட்டவரை “ஆகெழு கொங்கர்'’ எனச் சிறப்பித்துக் கூறினர்.

கொங்கு நாட்டின் வடக்கில் இருந்த புன்னாடு, முதற்கண் கங்கவேந்தர் ஆட்சிக்குள்ளாகிக் கங்க நாடானபோது, எருமை நாட்டில் எருமையூரரும் கொங்கு நாட்டில் அதியமான்களும் ஆட்சி செலுத்தினர். அதியமான்கள் இருந்தவூர் தகடூர் எனச் சங்க காலத்தில் வழங்கிற்று; இப்போது, அது தருமபுரியென வழங்குகிறது. எருமையது நாடு எருமை


  1. A.R. No.227 of 1927-8.
  2. Mysore Gazetteer Vol.I.p.334.
  3. A.R. No.7 of 1906.