பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 259



நாடென்றும், தகடூரைத் தலைநகராகக் கொண்டது தகடூர் நாடென்றும் பெயர் பெற்று விளங்கின.[1]

தகடூர் நாட்டுக்குத் தெற்கில் காவிரியின் கீழ்க் கரைக்கும் கொல்லி மலைக்கும் இடையிலிருந்து கொல்லிக்கூற்றம் என்றும், காவிரியின் மேலைப் பகுதி குறும்பு நாடு என்னும் நிலவின. கொல்லிக் கூற்றத்தின் தெற்கில் மேற்குக் கிழக்காக ஓடும் காவிரி யாற்றின் வடகரையில் கீழ்ப்பகுதி மழநாடு எனப்பட்டது. இப்போது அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி லால்குடி வட்டங்களாக விளங்குகிறது. கீழ்க் கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நாடும் உடுமலைப் பேட்டையின் ஒரு பகுதியும் பொறை நாடாகும்; எஞ்சிய பகுதியும் பழனி வட்டமும் வையாவி நாடு எனப்பட்டன; இடைக்காலத்தில் வையாவி நாடு வைகாவி நாடு என மருவி வழங்கினமை கல்வெட்டுகளால்[2] தெரிகிறது. பல்லடம் தாராபுரம் வட்டங்களின் ஒரு பகுதி குறும்பு நாட்டிலும் ஒரு பகுதி கீழ்க் கொங்கு நாட்டிலும், ஒரு பகுதி பொறை நாடு வையாவி நாடுகளிலும் இருந்தன. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தே, வாகைப் பெருந்துறையில் நன்னனோடு செய்த போரின் விளைவாகக் கொங்கு நாட்டின் குறும்பு நாட்டுப் பகுதி முற்றும் சேரர்க் குரியதாயிற்று. வடக்கில் தகடூர் நாட்டுக்கும் சேரர் கொங்கு நாடான குறும்பு நாட்டுக்கும் எல்லையாகப் பூவானியாறு விளங்கிற்று. கீழ் கொங்கு நாட்டுக் கருவூர், கருவூரான வஞ்சி என்றும்


  1. A.R. No. 235 of 1926-8,
  2. S.I.I. Vol. V. No. 285, 287