பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 சேர மன்னர் வரலாறு


செய்வர் என்ற எண்ணம் அவற்குண்டாயிற்று. முடிவில் தனக்குரிய துணைவரை ஆராய்ந்தான். தானும் தன் கீழ் வாழும் ஆயர்கள் செய்தது போலச் சேரமானைப் புகலடைந்து அவனது தாணிழல் வாழ்வு பெறுவதே தக்கது எனத் துணிந்தான்.

வடக்கில் அதியரும் ஏனைப் பகுதிகளில் வேளிரும் போற்றத் தனிப் பெருமையுடன் அரசு செலுத்தி வந்த தன் வாழ்வையும், அவர்கள் அறியத் தான் சேரரைப் புகலடைந்தால் உண்டாகும் தாழ்வையும், அதியரும் வேளிரும் தன்னை இகழ்வர் என எழுந்த நாணமும் கழுவுளைப் பெரிதும் வருத்தின. அதனால், அவன் மேன்மேலும் வந்து கொண்டிருக்கும் சேரர் படைப் பெருமையைத் தடுத்தற்கான செயல் ஒன்றையும் செய்ய இயலாதவனானான். சேரர் படையும் போந்து அவனிருந்த நகரைச் சூழ்ந்து கொண்டது. கழுவுளின் கருத்தறியாத தலைவர் சிலர், கொட்டி வருந்தும் குளவிக் கூட்டைக் கெடுத்து, அவைகள் பறந்து போந்து கொட்டத் தொடங்கியதும் மூலைக்கொருவராய்ச் சிதறியோடும் இளஞ்சிறார்களைப் போல, முற்றி யிருக்கும் சேரர் படைக்குச் சினமூட்டி விட்டு, அது சீறியெழக் கண்டு வலியிழந்து சிதறினர். உயிரிழந்தவர் போக, எஞ்சினோர் ‘உய்ந்தோம் உய்ந்தோம்’ என ஓடி ஒளிந்து கொண்டனர். முடிவில், சேரர் படை கழுவுள் இருந்த ஊரைத் துவைத் தழிக்கலுற்றது; புகையும் எழுந்து அரண்மனையைச் சூழ்ந்து கவிந்து கொண்டது. சேரர் தலைவர் அம் மதிலைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றிரவு விடியற் காலத்தே ஒருவர் கண்ணிலும்