பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 சேர மன்னர் வரலாறு



பெறத் தக்க முடிவேந்தர் இல்லாமையால், தகுதி நிறைந்திருந்த சேர வேந்தரைக் காண அவர் சோழ நாட்டினின்றும் புறப்பட்டார். அப்போது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டிற் பாசறையிட்டிருந்தான். அரிசில் கிழார் காவிரிக் கரை வழியே மழநாடு கடந்து கொங்கு நாட்டில் கொல்லிக் கூற்றத்தில் இரும்பொறை தங்கியிருக்கும் பாசறைக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே சேரமானைக் காண்பதற்கு இரவலரும் பரிசிலரும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இரும் பொறையின் போர்ச் சிறப்பையும் வள்ளன்மையையும் அரிசில் கிழார்க்கு எடுத்துரைத்தனர். அவரும் அதற்கு முன்பே அவனுடைய குணநலங்களைக் கேள்வி யுற்றிருந்தார். சேர நாட்டு உழவர், உழுத படைச்சாலிலே அரிய மணிகளைப் பெறுவர் என்றொரு சிறப்பு அக் காலத்தில் தமிழகமெங்கும் பரவியிருந்தது. அது பற்றியே கபிலரும், “செம்பரல் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு[1]” எனப் பாடினர். இதனை அரிசில்கிழாரும் அறிந்திருந்தார். பாசறைத் திருவோலக்கத்தில் தன்னை வந்து காணும் இரவலர் பலர்க்கும் பகைவர்பாற் பெற்ற குதிரைகளை இரும்பொறை வரைவின்றி வழங்குகின்றான் என்பதும், அவனுடைய தானை மறவர் போர்வினையில் துறை போகியவர் என்பதும் அவர்க்குத் தெரிந்திருந்தன. அவர்கள் தமது நாட்டு வணிகர் கடல் கடந்து வாணிகம்


  1. பதிற். 66.