பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 சேர மன்னர் வரலாறு



நாட்டுக்கும் கிழக்கே தொண்டை நாட்டுக்கும் இடையில் தனியரசு செலுத்தி வந்த அவனுக்குச் சேரவரசின் பரப்புப் பகைமை யுணர்வை எழுப்பிற்று. ஆகவே, அவன் ஆங்காங்கு வாழ்ந்த குறுநிலத் தலைவர்களை ஒன்று கூட்டி இரும்பொறையை வென்று வெருட்டுதற்கு உரியவற்றைச் சூழ்வானாயினன்.

அதியமான் எழினியின் குடிவரவும் காவற் சிறப்பும் கொடை வளமும் அரசில்கிழார் நன்கறிந்தன. அவன்பால் அவர்க்குப் பெருமதிப்புண்டு. சேரமானுடைய படைப் பெருமையைத் தான் நேரிற் கண்டிருந்தமையால், அதியமான் செயல் அவனுக்குக் கேடு தரும் என்பதை உணர்ந்து, அவன்பால் சென்று எடுத்தோதிப் போர் நிகழா வகையில் தடை செய்ய வேண்டும் என அரிசில்கிழார் எண்ணி, இரும்பொறையால் விடை பெற்றுக் கொண்டு தகடூர்க்குச் சென்றார். அதியமானையும், அவனுடைய தானைத் தலைவர்களையும், துணை நின்ற குறுநிலத் தலைவர் களையும் நேரிற் கண்டு, சேரனுடைய படைவலி, வினைவலி, துணைவலி முதலிய பல வலி வகைகளை எடுத்தோதினார். கழுவுள் தலைமடங்கி ஆயருடன் சேரமான்பால் புகல் அடைந்ததை இகழ்ந்து பேசினரே யன்றி, அவர்கள் அரிசில் கிழார் கூறியதை மனங் கொள்ளவில்லை. அதனால், அவர் அவர்களது மடமைக்குப் பெரிதும் மனம் கவன்று சேரமான் பக்கலே. வந்து சேர்ந்தார். அவரது முயற்சி பயன்படாமையை வேந்தன் குறிப்பாய் உணர்ந்து கொண்டு வேறு வகையிற் சொல்லாடி இன்புற்றான். அவனோடு இருக்கையில்