பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 273



யிட்டிருக்கும் இடம் வந்து சேர்ந்தனர். அவரது வாட்டம் கண்ட சேரமான், அரிசில் கிழாரது மனம் புண்ணுறு மாறு அவரை எழினி முதலியோர் இகழ்ந்து பேசினர் போலும் எனக் கருதி, நிகழ்ந்ததும் முற்றும் கூறுமாறு வேண்டினான். அப்போது; அவர், “வேந்தே, கொடை மடத்துக்கும் படைமடம் படாமைக்கும் எல்லையாக இருப்பவன் நீ; ஆதலால், இவ்விரண்டினும் பிறருக்கு எடுத்துக் காட்டாக இலங்குபவன் நீயே யாவாய். மேலும் நீ இப்போது பொறை நாட்டுக்கும் பூழி நாட்டுக்கும் கொல்லிக் கூற்றத்துக்கும் தலைவனாகியதனால், காவிரியின் இருகரையும் நினக்கு உரியவாயின; ஆகவே நீ “காவிரி மண்டிய சேய்விரி வனப்பின் புகா அர்ச் செல்வன்” ஆயினை. மேலும் இப்போது, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருநன், கொடித்தேர்ப் பொறையன் என்றற்கு அமைந்தனை; யான் சென்று அதியமானைக் கண்டு உனது இந்த அமைதியையும், உன்னுடைய வளம் ஆண்மை கைவண்மை முதலியன மாந்தர் அளவிறந்தன என்பதையும் விரித்து உரைத்தேன்; ஒரு நாளைக்குப் பல நாள் சென்று எடுத்துக் கூறினேன்; அவர்கள் கேட்கவில்லை. பின்னர், அந் நாட்டுச் சான்றோர் சிலரைக் கொண்டு சொல் வித்தேன். அதுவும் பயன் தரவில்லை. இவ்வாற்றால், என் மனம் கலங்கி மருண்டதும், அவர்கட்கு நல்லறிவு வழங்கும் திறம் யாது என எண்ணி வருந்தியதுமே இம் முயற்சியால் யான் பெற்ற பயனாயின[1] என்று சொல்லி வருந்தினார்.


  1. பதிற். 73.