பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276 சேர மன்னர் வரலாறு



வருத்தத்தை விளைவித்தது. எழினியை வீழ்த்தியது தமிழ் வள்ளன்மையையே வீழ்த்தியதாக எண்ணினார். அவனைப் போரிடத் தூண்டிப் பொன்றுவித்த தலைவர் எவரும் உயிருய்த்து சேரமான் ஆணை வழி நிற்பது கண்டார். அதனால், அவர்களை நோவாமல், கூற்றுவனை நொந்து, “அறமில்லாத கூற்றமே, வீழ்குடி யுழவன் ஒருவன் வித்தற்குரிய விதையை உண்டு கெடுவது போல, எழினியின் இன்னுயிரை உண்டு பேரிழப்புக்கு உள்ளாயினாய். அவனுயிரை உண்ணுவ யாயின், எத்துணையோ பகையுயிர்களை அவனது போர்க்களத்தே பெருக உண்டு வயிறு நிரம்பியிருப்பாய்; அவனது ஆட்சியில் கன்றோடு கூடிய ஆனிரைகள் காட்டிடத்தே பகையச்சமின்றி வேண்டுமிடத்தே தங்கும்; அவன் நாட்டிற்குப் புதியராய் வருவோர் கள்வந்து அச்சமின்றித் தாம் விரும்பிய இடத்தே தங்குவர்; நெல் முதலிய பொருட் குவைகள் காவல் வேண்டாதிருந்தன; இவ்வாறு நாட்டில் அகமும் புறமுமாகிய இருவகைப் பகையும் கடிந்து செங் கோன்மை வழுவாமல் நடந்தது; அவனுடைய போர்ச்செயல் பொய்யாத நலம் பொருந்தியது; அதனால் அவனைச் சான்றோர் அனைவரும் புகழ்ந்து பாடினர். அத்தகையோன் போரில் இறந்ததனால், ஈன்ற தாயை இழந்த இளங்குழவி போல அவனுடைய சுற்றத்தாரும் இளைஞர்களும் ஆங்காங்கு நின்று அழுது புலம்புகின்றனர். ஏனை மக்கள் கடும்பசி வருத்தக் கலங்கிக் கையற்று வாடுகின்றனர்[1]” என்று பாடி வருந்தினார்.


  1. புறம். 230.