பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 277



பின்பு, பெருஞ்சேரல் இரும்பொறை, அறம்பிழை யாது பொருது புண்ணுற்று விண்புகுந்த சான்றோர்க்குச் செய்யும் சிறப்பனைத்தும் தானே முன்னின்று அதியமான எழினிக்குச் செய்து, அவற்குப் பின் அரசுக் கட்டில் ஏறுதற்கு உரியானைத் தேர்ந்து அவனைத் தகடூர் நாட்டுக்கு அதியமானாக்கினான். அப் போரால் அழிந்த குடிகளை நிலைநிறுத்தி நாட்டில் நல்லரசும் நல்வாழ்வும் அமையச் செய்து தனது நாடு திரும்பினான்.

வஞ்சி நகரம் அடைந்த இரும்பொறை, தான் சென்றவிடமெல்லாம் தனக்கு வெற்றியே எய்தியது குறித்துத் தங்கள் குடிக்குரிய குல தெய்வமாகிய அயிரை மலையில் உறையும் கொற்றவைக்குப் பெரியதொரு விழாச் செய்தான். யானைக் கோடுகளால் கட்டில் ஒன்று செய்து அதன் மேல் அக் கொற்றவையை எழுந் தருளுவித்தனர். அந்த யானைக் கோடுகளும் சேரமானுடைய ஆணைவழி வராத பகை வேந்தர் யானைகளைப் பற்றி அவை கதறக் கதற அறுத்துக் கொள்ளப்பட்டவை, பிறகு, அக் கொற்றவைக்குப் பலியிடுங்கால், வழிபாடு இயற்றும் மறவர் தம் மார்பிற் புண்ணிலிருந்து ஒழுகும் குருதியைப் பிடித்துத் தெளிப்பர். அதனைக் கண்டிருந்த அரிசில் கிழார் பெருவியப்புற்று, “வேந்தே, போரில் நீ நின் உயிரைப் பொருளாகக் கருதுகின்றாயில்லை . இரவலர் நடுவண் இருந்து கொடை வழங்குவதிலும் நீ குறைபடுவதில்லை. அறிவு ஆண்மைகளிற் பெரியராகிய சான்றோரைப் பேணத் தமராகக் கொள்வதிலும் தலைசிறந்து விளங்குகின்றாய்; இத்தகைய குணஞ்செயல்களால் எல்லாப்