பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 279



அக் கருத்தாலேயே சிறுவர்களைத் தான் பெற்று வளரப்பதாகவும் அறிவுறுத்தினான்; அவன் மக்களுடைய எண்ணமும் சொல்லும் செயலுமாகிய எல்லாம் அக் கருத்தைப் பின் பற்றி நிற்கக் கண்டு அரிசல் கிழார் பெருவியப்புற்றார். பின் பொருகால், உயர்நிலை யுலகம் புகுந்த சான்றோர் இன்புறுதற்கென வேள்வியொன்று செய்தான். வேள்வித் தொழில் வல்ல சான்றோர் பலர் அவ் வேள்விக்கு வந்திருந்தனர். வேள்வியும் மிக்க சிறப்பாக நடந்தேறியது. வேள்வி முடிவில் வந்திருந்த பலர்க்கும் பெரும் பொருள்கள் பரிசில் வழங்கப் பெற்றன. அவ் வேள்விக் காலத்தில், அரிசில் கிழார் உடனிருந்து, பாட்டாலும் உரையாலும் அரசனது புகழ் பெருக்கத்தக்க செயல் வகைகளைச் செய்தார். அதனால் மகிழ்ச்சி மிகுந்து, பெருஞ்சேரல் இரும்பொறை கோயிலாளுடன் புறம்போந்து நின்று, “கோயிலில் உள்ளவெல்லாம் கொள்க” என்று சொன்னான்; அதனால் அரிசில் கிழார்க்கு உண்டான வியப்புக்கு அளவில்லை; அவர் அப்படியே மருண்டு போய் விட்டார்.

சிறிது தெளிவுற்று வேந்தனை நோக்கினார்; “வேந்தே என் மனத்தில் ஒரு குறையுளது; அதனை நிறைவித்தல் வேண்டும்” எனக் குறையிரந்து நின்றார். அவர் கருத்தறியாத வேந்தன், ஒன்பது நூறாயிரம் பொன்னையும் தனது அரசு கட்டிலையும் நல்கினான். அரிசில் கிழார், அப் பொன்னைப் பெற்றுக்கொண்டு, வேந்தனைப் பணிந்து “அரசே, நீயே இக் கட்டில் மேல் இருந்து அரசாளுதல் வேண்டும்; இக் கோயிலும் இதன்