பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 283



கொண்டு நிற்கிறது, அந்தத் துயரை முந்துறுத்தே செல்கின்றேன்[1].

குடக்கோ : (முறுவலித்து) நும்மை முற்றியிருக்கும் வறுமைத் துன்பத்துக்கு என் தானை தக்க உவமமாகாது, அஃது என் வயம் இருப்பது.

இதனைக் கேட்டதும் பெருங்குன்றூர்கிழார், “சேரமான் கொடாதொழிகுவனல்லன்; சில நாள்கள் தன்பால் இருக்க வேண்டும்” என்று கருதுகின்றான் போலும் என நினைத்தார். அவ்வாறே சின்னாள்கள் இருந்து மறுபடியும் ஒருநாள் இரும்பொறையைக் கண்டார். அவனோடு அளவளாவிப் பரிசிலர்க்குப் பரிசில் கொடாது மறுத்த செல்வர் சிலரைக் குறித்துக் கூறித் தனக்கு விடை நல்குமாறு வேண்டினார். அப்போதும் அவன் பரிசில் ஒன்றும் நல்கும் குறிப் புடையனாகத் தோன்றவில்லை. புலவர்க்கு அது காணவே ஒருபால் அவலமும், ஒருபால் வெகுளியும் உண்டாயின. தம்முடைய கண்களைப் பரக்க விழித்து வேந்தனை நோக்கினார். “புகழுடைய வேந்தே, உன்னைக் கண்டு பரிசில் பெற வந்த யான் ஒரு பரிசிலனே; ஆயினும் யான் ஓர் ஓங்கு நிலைப் பரிசிலன், பரிசிலரை யேற்று அவர்க்கு உரிய பரிசில் கொடாது மறுத்த பிற செல்வருடைய கொடுமைகளைச் சொன்னால், நீ வள்ளன்மையுடையை யாதலால், மனம் இரங்கிப் பெரும் பரிசில் நல்குவாய் என எண்ணியே அவற்றை நினக்கு மொழிந்தேன். எனினும், நீ உன்


  1. புறம். 210.