பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 சேர மன்னர் வரலாறு



வருந்துவாளாயினள். இச் செய்தி பெருங்குன்றூர் கிழார்க்குத் தெரிந்தது. அவள் காரணமாகப் பேகனைக் காண்டல் வேண்டுமென்று நினைத்து, வையாவி நாட்டை அடைந்து கண்ணகியின் மனநிலையை உணர்ந்தார், பின்பு பெரும் பேகனைக் கண்டார். சான்றோர் சால்பறிந்து பேணும் தக்கோனாகிய பேகன், அவரை வரவேற்று அவர்க்குப் பெரும் பொருளைப் பரிசில் நல்கினான்.

பெருங்குன்றூர் கிழார் முதலிய அந் நாளைச் சான்றோர், வெறும் பொருட்காகப் பாடித் திரியும் வாணிகப் பரிசிலரல்லர். அவர் பேகனை யடைந்தது பரிசில் குறித்தன்று; அதனால், அவர், “வள்ளால், யான் வேண்டும் பரிசில் ஈதன்று” என்றார். தனது புறத் தொழுக்கம் அவர்க்குத் தெரியாது என எண்ணிய பெரும் பேகன் வியப்புற்று நோக்கினான். “ஆவியர் கோவே, காடுமலைகளைக் கடந்து நேற்று இவ்வூர் வந்த யான் ஓரிடத்தே தனித்துறையும் நங்கையார் மாசறக் கழுவிய மணிபோல் விளங்குமாறு தன் குழலை நெய்விட்டு ஒப்பனை செய்து புதுமலர் சூடி மகிழச் செய்தல் வேண்டும். அதனைச் செய்விக்கும் உரிமை யுடையவன் நீயே; நீ அதனைச் செய்வதொன்றே யான் நின்பால் பெற விரும்பும் பரிசில்; வேறு ஒன்றும் இல்லை[1]” என்ற கருத்தமைந்த பாட்டை இசை நலம் விளங்க யாழிலிட்டுச் செவ்வழிப் பண்ணிற் சிறக்கப் பாடினர். வையாவிக் கோவாகிய பெரும் பேகன்

  1. புறம். 147.