பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 289



இரும்பொறை என்ற இவர்கள் வழிவந்த நீ, பாசறைக் கண் கவணைப் பொறியும் கள்ளுணவும் உடைய கொங்கர்க்கும், தொண்டியைத் தலைநகராகவுடைய பொறையர்க்கும் தலைவன்; அயிரை மலையிலிருந்து இழிந்து வரும் பேரியாறு போல, நின்பால் வரும் இரவலர் பலர்க்கும் ஈயக் குறையாத பெருஞ் செல்வம் மேன்மேலும் பெருக, அரண்மனைக்கண் மகளிர் நடுவண் ஞாயிறு போலப் பன்னாள் விளங்குவாயாக; நின் விளக்கம் காணவே யான் இங்கு வந்தேன்[1]” என்று தேனொழுகும் செஞ்செற் கவியினைப் பாடினர். கேட்டோர் பலரும் பேரின்பத்தால் கிளர்ச்சியுற்றனர். வேந்தனும், அவர்க்கு அவர் வாழும் பெருங்குன்றூரையே இறையிலி முற்றூட்டாகத் தந்து பெருங்குன்றூர் கிழார் என்ற சிறப்பும் அளித்து இன்புற்றான். அது முதல் அவர் பெருங்குன்றூர் கிழார் எனச் சான்றோரால் பெரிதும் பேசப்படுவாராயினர். அதன் விளைவாக அவரது இயற்பெயர் மறைந்து போயிற்று. இன்றும் நாம் பெருங்குன்றூர் கிழார் எனவே நூல்கள் கூறக் காண்கின்றோம்.

இளஞ்சேரல் இரும்பொறை அரசுபுரிந்த நாளில் விச்சிக்கோவொடு பொருத இளஞ்சேட்சென்னி இறக்கவும், உறையூரில் கோப்பெருஞ்சோழன் வேந்தாகி அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டு மதுரையில் பாண்டியன் அறிவுடை நம்பி அரசு செலுத்தினான். தென்பாண்டி நாட்டுத் தண்ணான் பொருதைக் கரையிலுள்ள பழையன் கோட்டையில்[2] இளம்


  1. பதிற். 88.
  2. பழையன்கோட்டை பிற்காலத்தே பனையன் கோட்டையாய்ப் பாளையங்கோட்டையாய் மருவி விட்டது. தண்ணான் பொருகை தாம்பிரபரணியாய் விட்டது.