பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 சேர மன்னர் வரலாறு



பொருவது தற்செயலாகாது; உயர்ந்த நோக்கமும் சிறந்த செய்கையும் உடையவரே உயர்வர்; அவர்கட்கு இம்மையிற் புகழும் மறுமையில் வீடுபேறும் உண்டாகும்; அவ்விரண்டும் இல்லையென்றாலும், இம்மையிற் புகழுண்டாதல் ஒருதலை[1] என வற்புறுத்தி அவர்கள் கூறிய கருத்தை மறுத்தான். தன் மக்கட்கு அவன் கூறிய நல்லறம் இனிதாகத் தோன்றவில்லை. பழையன் மாறனது சூழ்ச்சி வலைப்பட்ட அவர்களது உள்ளம் தந்தையின் கூற்றையும் புறக்கணித்தது. அவர்களும் பாண்டிநாடு வந்து பழையன் முயற்சிக்குத் துணையாய் வேண்டுவன செய்யத் தலைப்பட்டனர்.

பாண்டி நாட்டுத் தென்காசிப் பகுதியில் கல்லாக நாடு என்பது ஒரு பகுதி[2]. அப் பகுதி அரிய காவற்காடு அமைந்து சீர்த்த பாதுகாப்புடைய இடமாகும். அப் பகுதியில் அவர்கள் ஐந்து இடங்களில் வலிய எயில்களை அமைத்துக் கொண்டு சேர நாட்டவரைப் போர்க் கிழுத்தனர். இளஞ்சேரல் இரும்பொறை, பொறையரும் குட்டுவரும் பூழியரும் கலந்து பெருகிய பெரும் படையுடன் வந்து கங்கைப் பகுதியில் பாசறை யிட்டான்.

கோப்பெருஞ்சோழன் மக்களும் பழையன் மாறனும் கல்லக நாட்டில் அமைத்திருந்த எயில்களைச் செவ்வையாகக் காத்து நின்றனர். போர்க்குரிய செவ்வி எய்தியதும் போர் தொடங்கிற்று. சேரமான் ஒவ்வொரு எயிலாக முற்றி நின்று பொரத் தலைப்பட்டான்.


  1. புறம். 214.
  2. A.R. No.614 of 1917.