பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 297



உள்ளம் ஈடுபட்டது. அதனால், அவனது மனம் வெவ்விய சினத் தீயால் வெந்து கரிந்து அருள் என்பதே இல்லையாமாறு புலர்ந்து விடுமோ என்று பெருங் குன்றூர் கிழார் அஞ்சினார். ஒருகால், அவன் மகிழ்ந் திருக்கும் செவ்வி கண்டு, அவரோடு சொல்லாடலுற்று, “வேந்தே, முன்பு விச்சிக்கோவும் வேந்தர் இருவரும் கூடிச் செய்த கொங்கு நாட்டுப் போரில் பகைவர்பாற் பெற்ற பொற்கலங்களை உருக்கிக் கட்டிகளாக்கி இரவலர்க்கும் பரிசிலர்க்கும் வரைவின்றி நல்கினை. அங்குள்ள கொல்லிமலைப் பகுதி மணம் மிகுந்த இருள்வாசிப்பூவும் பசும்பிடியும் சிறக்கவுடையது. நின் தேவி அவற்றைத் தன் கூந்தலில் விருப்பத்தோடு சூடிக்கொள்வாள். அக் கூந்தல், தன்பால் மொய்க்கும் வண்டினத்தின் நிறம் விளங்கித் தோன்றாவாறு விளங்குவது; கூந்தற்கேற்ற ஒளிதிகழும் நுதலும், அழகுமிகும் அணிகளும், குழையளவும் நீண்டு ஒளிரும் கண்களும், பெருந்தகைமைக்கு இடமெனக் கட்டும் மென்மொழியும், அருளொளி பரப்பும் திருமுகமும் பிரிவின்கண் மறக்கத் தகுவனவல்ல; நீ பிரிந்திருப்பதால் நாளும் கண்ணுறக்கமின்றி முகம் வாடி நுதல் ஒளி மழுங்கி இருக்குமாதலின், ஒரு நாளைக்கு நீ நின் தேவியைக் காண்பது குறித்துத் தேரேறுவாயாயின், தேவியும் பிரிவுத்துயர் நிங்கித் தெளிவு பெறுதல் கூடும். பன்னாட்களாய்க் கண்ணுறக்கமின்றி அடைமதிற்பட்டு அமைந்திருக்கும் அரசரும் சிறிது கண்ணுறங்குவர்; பின்னர் அவரும் போரெதிர்வர்; நீயும் வெல்போர்