பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 299



பண்டொரு நாள் நின் முன்னோர், தன் மேல் நின்று காணின் நாடு முழுதையும் நன்கு காணத்தக்க உயர்ச்சி பொருந்திய குன்றின்கண் உள்ள நறவூரின் கண்ணே இருந்தனர். அவரது நாண்மகிழ் இருக்கையாகிய திருவோலக்கத்தைக் கபிலர் என்னும் சான்றோர், இன்றும் கண்ணிற் காண்பது போல அழகுறப் பாடியுள்ளனர்; அவருக்குக் கொங்கு நாட்டுக்குன்றேறி நின்று கண்ணிற் பட்ட ஊர்களையெல்லாம் கொடுத்தனர். அன்று கபிலன் பெற்ற ஊர்களினும் சோழர் எறிந்த வேல்கள் பலவாகும்[1]” என்று பாடினர். இரும்பொறை அவர்க்குப் பன்னாறாயிரம் காணம் பொன்னும் நிலமும் தந்து மகிழ்வித்தான்.

இனி அஞ்சியோடினும், சேரமான் தன்னை இனிது இருக்கவிடான் என்று நினைத்து மனங்கலங்கிய இளம் பழையன் மாறன், பெருஞ் செல்வங்களையும் பெறற்கரிய கலங்களையும் திறை தந்து பணிந்து புகலடைந்தான். அவற்றைப் பெற்றுக் கொண்டு பழையனுக்குப் புகல் அளித்த சேரமான் இளஞ்சேர் விரும்பொறை, அவற்றைத் தன் வஞ்சி நகர்க்குக் கொணர்ந்து பரிசிலர்க்கும் இரவலர்க்கும் எல்லார்க்கும் வரைவின்றி வழங்கினான். பழையன் மாறனும் அவன் ஆணைவழி நின்று ஒழுகலானான்.

தன் கருத்துக்கு மாறாகப் பழையனோடு கூடிச் சென்று, சேரமானுடன் பொருது, தோற்றோடி வந்த மக்கள் செயல் தன் புகழ்க்கு மாசு தரக் கண்டான்


  1. பதிற். 85.