பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308 சேர மன்னர் வரலாறு



சங்க நூல்களும்[1] கல்வெட்டுகளும்[2] குறிக்கின்றன. அப் பகுதியிலுள்ள குடமலைத் தொடர்க்குப் பாயல் மலை என்பது பெயர். மலையாளத்துக் குறும்பர் நாடு வட்டத்தின் ஒரு பகுதிக்கும் பாயல் நாடு என்றே இன்றும் பெயர் வழங்குகிறது.

இப் பாயல் நாட்டின் வேறொரு பகுதிக்குக் கடுங்கோ நாடு என்பது பெயர். வள்ளுவ நாடு மாவட்டத்ததில் இன்றும் கடுங்கோவூர், கடுங்கோபுரம் எனப் பெயர் தாங்கிய ஊர்கள் இருக்கின்றன. அந்நாட்டிலிருந்து அரசு புரிந்தவர் கடுங்கோ எனப்படுவர். அந்நாடு செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திலோ அவற்கு முன்னோ இப்பெயரை எழுதியிருக்கலாம். இந்நிலையில் தென்பாண்டி நாட்டில், கொற்கை, ஆற்றூர் முதலிய ஊர்கள் இருக்கும் பகுதிக்குக் குடநாடு என்றும் கடுங்கோ மண்டலம்[3] என்றும் பெயர் உண்டு; குடநாட்டுப் பிரமதேயம் கடுங்கோ மங்கலமான உலகுய்ய வந்த பாண்டியச் சதுர்வேதிமங்கலம் எனவரும் ஆற்றூர்க் கல்வெட்டொன்றும்[4] ஈண்டு நினைவு கூரத்தக்கது. வேள்விக்குடிச் செப்பேட்டில்[5] காணப்படும் பாண்டி வேந்தர் நிரலில் முன்னோனாக வரும் கடுங்கோவின் பெயரால் இத்தென்பாண்டி நாட்டுப் பகுதி இவ்வாறு கடுங்கோ மண்டலம் எனப்படுவ தாயிற்று. ஈங்கு நாம் காணும் கடுங்கோ, பொறை நாட்டுச் சேர வேந்தராவர். தென்பாண்டி நாட்டில் காணப்படும்


  1. புறம் 398.
  2. Coorg. Ins. Vol. 1. Introduction P.3.
  3. A.R. No. 391 of 1930.
  4. A.R. No. 468 of 1930.
  5. Epi. Indi. Vol. xvii. No. 16