பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 311



அலைத்துக் கூக்குரலிட்டு அழ அழப் பொருள் கவர்ந்து கொள்வானாயின், அவனது நாடு எவ்வாறு பொலி வழிந்து கெடுமோ, அவ்வாறே உயரிய மரங்கள் உலறிப் பொலிவின்றி யிருக்கின்றன[1] என்று கூறுகின்றார். காதலனைப் பிரிந்துறையும் கற்புடைய மகளொருத்தி யின் வருத்தத்தை, “ஆள்பவர் கலக்குற அலைவுற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ[2]” என்றும், அந் நிலையில் இளவேனில் காலம் வர அதனைக் காணும் தோழி அவ் வேனிலை வெறுத்து, பேதையை அமைச்சனாகவுடைய பீடிலா மன்னன் ஒருவனுடைய நாட்டில் பகையரசர் எளிதில் வந்து புகுவதுபோல இளவேனில் வந்தது[3] என்றும் கூறுவன அவரது அரசியலுணர்வை வெளியிடுகின்றன.

உள்ள பொருள் செலவாகித் தொலைந்தமையால் இரப்பவரும், அறவே ஒன்றும் இல்லாது வறுமையால் இரப்பவரும், வேண்டுமளவு பொருளில்லாமையால் இரப்பவரும் என இரப்போருள் பல் வேறு வகையினர் உண்டு. இப் பெற்றியோர்க்குச் சிறிதளவேனும் ஈத்தொழிவது சிறப்பு; ஒன்றும் ஈயாமை இழிவு[4] என்பது இக் கடுங்கோ கூறும் அறிவுரை. நிலைபேறில்லாத செல்வப் பொருளை உயிர்க்கு உறுதுணையாகும் நிலையுடைய பொருள் என உணர்வது மயக்கவுணர்வு. பொருளில்லார்க்குக் காதலர் யாது செய்வர் என்று ஏதிலார் கூறுவர்; அவர் சொல் கொள்ளத் தகுவதன்று. செம்மை நெறியிலன்றிப் பொருள் செய்பவர்க்கு அஃது இருமையும் பகை செய்யும்[5]. வளமை எக் காலத்தும்


  1. கலி. 10.
  2. கலி. 5.
  3. கலி. 27.
  4. கலி. 1.
  5. கலி. 14.