பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312 சேர மன்னர் வரலாறு



செய்து கொள்ளப்படும் எளிமையுடையது; இளமையோ கழிந்தபின் பெறல் அரிது[1]; இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு மறையும்[2]; ஒருவர்பால் கடன் கேட்குங்கால் கடன் வாங்குவோர் முகம் இருக்கும் இயல்பு வேறு; அக் கடனைத் திரும்பத் தருங்கால் அவர் முகம் இருக்கும் இயல்பு வேறு; இவ்வாறு முகம் வேறுபடுவது முற்காலத்தும் இவ்வுலகில் இயற்கை; இப்போது அது புதுவதாக இல்லை[3]. கண்ணிற் கண்ட போது சிறப்புச் செய்து புகழ்பல கூறி, நீங்கியவழி அச் சிறப்புச் செய்யப்பட்டோருடைய பழியை எடுத்துத் தூற்றுவதும், செல்வமுடையாரைச் சேர்ந்திருந்து, அவரது செல்வத்தைக் கூடியிருந்து உண்டு அது குறைந்தபோது அவர்கள் உதவாதொழிவதும், நட்புக் காலத்தில் ஒருவருடைய மறை (இரகிசயம்) எல்லாம் அறிந்து கொண்டு, பிரிந்த காலத்தில் அவற்றை எடுத்துப் பிறரெல்லாம் அறிய வுரைப்பதும் தீச்செயல்களாகும்[4]; முன்பு தமக்கு ஓர் உதவியைதச் செய்து தம்மை உயர்த்த முயன்ற ஒருவர் தாழ்வெய்துவராயின், இயன்ற அளவு முயன்று கூடிய தொன்றைச் செய்வரே பீடுடையோ ராவர்[5]; ஆடவர்க்கு உழைப்பே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவர் உயிர்[6]; தம்பால் உள்ள பொருளைச் சிதைப்பவர் உயிரோடிருப்பவர் எனப் படார் : இல்லாதாருடைய வாழ்க்கை இரத்தலினும் இளிவந்தது[7]; ஒருவர்க்கு அறத்தின் நீங்காத


  1. கலி. 14
  2. கலி. 21
  3. கலி. 22
  4. கலி. 25
  5. கலி. 34
  6. குறுந். 15.
  7. குறுந். 283.