பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 313



வாழ்க்கையும், பிறன்மனை முன் சென்று உதவி நாடி நில்லாத செல்வமும் உண்டாவது பொருளால்தான் ஆகும்[1]; நீர்சூழ்ந்த நிலவுலக முற்றும் அதன்கண் வாழ்வோடு அனைவர்க்கும் பொது என்பதன்றி தனக்கே சிறப்புரிமை யென்ன அமைந்தபோதும், ஒருவன்பால் செல்வம் கனவுபோல் நீங்கி மறையும்[2]; தன்னை விரும்பி ஈட்டிக் கொண்டவரைத் தான் பிரியுங்கால், கொண்ட காலத்துக்கு மாறாகப் பிறர் கண்டு எள்ளி நகையாடுமாறு நீங்குவது செல்வத்தின் இயல்பு; நிலையில்லாத அதனை ஒருவர் விரும்ப லாகாது, ஒரு பயனும் நோக்காது தன்னையுடைய அரசன் ஆக்கம் பெற வேண்டும் என முயலும் சான்றோன் ஒருவனை, அவ்வரசன் கண்ணோட்டம் இன்றிக் கொல்வானாயின், அவனது அரசு நிலை பெறாது ஒழிவது போலச் செல்வமும் நில்லாது நீங்கும்; அதனை ஒருவர் விரும்பலாகாது என்பன போல்வன பெருங்கடுங்கோவின் அரசியலறிவும் உலகியலறிவும் இப் பெற்றியவை என நாம் நன்கறிதற்குச் சான்றா கின்றன.

இவரது உள்ளமுற்றும் அறவுணர்வுகளே நிரம்பிக் கிடத்தலால், சொல்லும் சொற்றோறும் அறமே கூறு கின்றார். அவரது செயல்வகைப்பட்ட கட்பார்வையும் அவ்வாறே அறம் கனிந்திருப்பது நாம் அறியற்பாலது. வெவ்விய சுரத்தின்கண் செல்பவர்க்கு நீர்வேட்கை உண்டாவது இயல்பு. சுரத்தின்கண் நீர்நிலைகள் இரா.


  1. அகம். 155.
  2. அகம். 379.