பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 சேர மன்னர் வரலாறு



சுரங்களில் கள்ளி காரை முதலிய செடிகளும், நெல்லி, பாலை முதலிய மரங்களும் இருக்கும். நிலமும் சிறுசிறு கற்கள் பரந்த முரம்பாகும். வேனிற்காலத்தில் நெல்லி மரங்கள் காய்ப்பது இயற்கை. சுரத்துவழிச் செல்வோர் வேனில் வெப்பத்தால் விடாய்கொண்டபோது நெல்லிக் காயைத் தின்பர். அஃது இனிய நீரூறி வேட்கை தணிவிக்கும். அதனாலே, சுரத்தில் அமைந்த பெரு வழிகள், இருமருங்கும் வரிசையாக அம் மரங்களைக் கொண்டிருக்கின்றன. நெடுஞ்சுரத்தின் வழிச்செல் வோர்க்கு இனிய காயைத் தந்து வேனில் வேட்கை தணிவிக்கும் சிறப்புக் கண்ட நம் கடுங்கோ , “அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்[1]” என்பாராயின், அவரை நடமாடும் அறக்கோயில் என்பதன்றி வேறு யாது கூறலாம்?[2]

இயற்கையழகில் அவரது உள்ளம் தோய்வது காண்மின்: வேனிலில் ஒரு பால் முருக்க மரத்தின் செம்முகைகள் வீழ்ந்து சிதறிக் கிடக்கின்றன; கோங்கு, அதிரல், பாதிரி முதலியன மலர்ந்து கிளைகளில் மலர்களைத் தாங்கி நிற்கின்றன; எங்கும் வண்டினம் தேனுண்டு முரலுகின்றன. இவற்றைக் காணும் கடுங்கோவின் உள்ளம் அக் காட்சியில் ஈடுபடுகிறது.

மராமலர் கொண்டு மனைமுழுதும் கோலஞ் செய்து முருகவேளை வழிபடும் செல்வர் மனை யொன்றின் உருவம் மனக் கண்ணில் தோன்றுகிறது. உடனே, பெருங்கடுங்கோ தமது தமிழ் கமழும் மனங்


  1. கலி. 8.
  2. அகம். 379.