பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 317



“செல்; இனி, சென்று நீ செய்யும் வினைமுற்றி,
‘அன்பற மாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?’ என்று வருவாரை
எம்திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கும் நின் செம்மல் சிதையத்
தவலரும் செய்வினை முற்றாமல், ஆண்டு, ஓர்
அவலம் படுதலும் உண்டு”

என்று கூறுகின்றாள்[1]. காளை யுள்ளத்தில் கவலையும் கலக்கமும் கஞலுகின்றன; கையறவு படுகின்றான்.

சின்னாட்குப்பின், தன் காதலிபால் தனது பிரிவுக் குறிப்பைத் தெரிவிக்கின்றான். அவள் தன் மகனைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கிறாள். மகனுடைய தலை எண்ணையிட்டு நீவிப் பூச்சூடி வனப்புடன் விளங்கு கிறது. “பிரிவது அறத்தாறு அன்று'’ எனச் சொல்லித் தன் காதலனைச் செலவு விலக்க நினைத்தாள். துயர் மீதூர்ந்து நா எழாவாறு தடுத்தொழிந்தது. ஆயினும், அவள், தனது கருத்தைக் கண்ணாலும் முகத்தாலும் காட்டினாள். அவளது அப்போதைய நிலை அவனுடைய மனக் கிழியில் நன்கு பதிந்து விட்டது. அவள், தன் மகன் தலையில் சூடிய பூவை மோந்து உயிர்த்தாள். அதன் வெப்ப மிகுதியால் பூவும் நிறம் மாறி வதங்கிவிட்டது. அதனை நினைந்து தான் செல்வது தவிர்ந்ததாக அவன் கூறியதனைப் பெருங் கடுங்கோ அப் பாட்டொன்றில் சொல்லோவியம் செய்கின்றார், காண்மின்;


  1. கலி. 19.