பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 319


ஏத்தித் திரியும் அறிஞர் அவரை அறிந்திலரே! என்னே அவரது இயல்பிருந்தவாறு!

இதோ, கோங்கமரஞ் செறிந்த காடு தோன்றுகிறது; கார்த்திகை விளக்கீடு கடுங்கோவின் நினைவுக்கு வருகிறது. அதனைத் தமிழ்மகள் ஒருத்திக்குக் காட்டுவார் போன்று, “கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை, அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள், செல்சுடர் நெடுங்கொடி போலப், பல்பூங்கோங்கம் அணிந்த காடே[1]” என்று இசைக்கின்றார். கார்த்திகை விளக்கீடு காட்சிக்கு இனிது என்பதை, இடைக்காலத்தில் இருந்த திருஞானசம்பந்தரும், “தொல் கார்த்திகை நாள், தளத்தேந்திள (முல்லைத்) தையலார் கொண்டாடும், விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்[2]” என்று பாடியுள்ளார்; - கார்த்திகையைக் கைவிட்டுத் தீபாவளியைத் தீவளியாக்கி இருளிரவில் தோசை தின்றுழலும் இக்காலத் தமிழர்களுக்கு இதன் அழகு எங்ஙனம் தெரியப் போகிறது?

இவருடைய பாட்டுகளில் ஈடுபட்டுப் பேரின்பம் துய்த்த நற்றிணையுரைகாரரான திரு. நாராயணசாமி ஐயர்[3]. “தலைமகளைத் தலைமகன் காண்பது, தான் வழிபடு தெய்வத்தைக் கண்ணெதிரில் வரப்பெற்றாற் போன்றது என்று கூறுகின்றார்; இதில் தலைமகளை இனிது கூறி நடத்திச் செல்வது வியக்கத் தக்கது” என்றும் “பிரிவு உணர்த்தியவழித் தோழி நாம் முன்பு வந்த கொடிய சுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரே


  1. நற். 202.
  2. ஞானசம். திருமயிலை. 3.
  3. நற். பாடினோர். பக்.55.