பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 323



இனிது வாழ்ந்தனர். இவன் காத்த நாடு புத்தேள் உலகம் போல்வது[1] எனச் சான்றோர் புகழும் பொற்புடையதாய் விளங்கிற்று. இவன் நாட்டு மக்கட்குச் சோறு சமைக்கும் தீயின் வெம்மையும், ஞாயிற்றின் வெம்மையுமே யன்றிக் கோல் வெம்மையோ பகைவர் செய்யும் வெம்மையோ ஒன்றும் தெரியாது. அவர்கள் நாட்டில் வானவில் வளைந்து தோன்றுவதுண்டேயன்றிக் கொலை குறிக்கும் வில் வளைந்து தோன்றுவது கிடையாது; படை வகையில், நிலத்தைக் கலப்பை கொண்டு உழுங்கால் காணப்படும் படையல்லது பகைவர் அணி கொண்டு திரண்டுவரும் படைவகை காணப்படுவதில்லை. அவனது நாட்டில் சூல் கொண்ட மகளிருள் சிலர் மண்ணை உண்பது கண்டதுண்டேயன்றிப் பகை வேந்தர் போந்து கவர்ந்துண்ணக் கண்டதில்லை.[2]

இவனது ஆட்சியில் சேரர் குடியில் தோன்றிய தலைவர் பலர், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நாடு காவல் புரிந்தனர். சேர நாட்டின் எல்லை தெற்கே தென்பாண்டி நாடு வரையிலும் கிழக்கிற் கொங்குநாடு முற்றும் பரவியிருந்தது. வட கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றமும், தெற்கில் தென்பாண்டி நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் இடையிற் கிடந்த வேணாடும் சேர நாட்டிற்குள் அடங்கியிருந்தன.

இப்போது திருவாங்கூர் நாட்டிலுள்ளதும், பண்டை நாளில் குட்டநாட்டைச் சேர்ந்திருந்ததுமான அம்பலப் புழை வட்டத்தில், குறுங்கோழியூர் என்றோர்


  1. புறம். 22.
  2. புறம். 20.