பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324 சேர மன்னர் வரலாறு



ஊர் இருந்தது. அஃது இப்போது கோழிமுக்கு என வழங்குகிறது. குறுங்கோழியூர் எனவே பெருங்கோழியூர் என்றோர் ஊரும் இருக்கவேண்டுமே என நினைவு எழும்; பெருங்கோழியூர் இப்போது பெருங்கோளூர் என்ற பெயருடன் புதுக்கோட்டைப் பகுதியில் உளது. அதற்குப் பண்டை நாளில் பெருங்கோழியூர் எனப் பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று[1] கூறுகிறது. சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை அரசுபுரிந்த நாளில் இக் குறுங் கோழியூரில் நல்லிசைப்புலமை வாய்ந்த சான்றோர் ஒருவர் வாழ்ந்தார். சேயினது ஆட்சி நலத்தால் மக்கள் இன்ப அன்பு கலந்து அறவாழ்வு வாழ்வது கண்டு அவர் பெருமகிழ்வு கொண்டார். வேந்தனுடைய அறிவும் அருளும் பெருங் கண்ணோட்டமும் அப்புலவர் பெருமானுக்குப் பேருவகை தந்தன. பகைமையும் வறுமையும் இன்றி, நாட்டவர் மழையும் வயல் வளமும் பெருகப் பெற்றுச் செம்மாந்திருந்தனர். போர் இல்லாமையால், கடியரண்களில் அம்பும் வேலும் வாளுமாகிய படைகள் செயலற்றுக் கிடந்தன. வேத்தவையில் அறக் கடவுள் இன்பவோலக்கம் பெற்றிருந்தது. புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், நாட்டு மக்கள் அச்சம் சிறிதுமின்றி அமைந்திருந்தனர். குறுங்கோழியூர்ச் சான்றோர் இவற்றைக் கண்டு இன்புற்று வருகையில் நாட்டவர் உள்ளத்தில் அச்சம் ஒன்று நிலவக் கண்டார். அவர்க்கு வியப்புண்டாயிற்று.


  1. P.S. Ins. 701.