பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 325



உண்மையாய் ஆராய்ந்தபோது, மக்கட்கு வேந்தன்பால் உண்டான அன்பு மிகுதியால், “அவனுக்கு எங்கே இடையூறு உண்டாகிவிடுமோ?” என்ற அச்சம் அவர்களது உள்ளத்தில் நிலவின்மை தெரிந்தது. அதனால், அவர் வேந்தன்பால் சென்று தாம் கண்ட காட்சிகளைத் தொகுத்து இனிய பாட்டொன்றில்[1] தொடுத்துப் பாடினார். அப் பாட்டின்கண், சேரமான் யானைக்கண் சேயினுடைய அளப்பரிய வலிநிலையை வியந்து, “வேந்தே , கடலும் நிலமும் காற்றும் வழங்கும் திசையும் ஆகாயமுமாகிய இவற்றின் அகலம் ஆழம் உயர்வு முதலிய கூறுகளை அளந்தறிவது என்பது அரியதொரு செயல் ; முயன்றால் அதனையும் செய்து முடிக்கலாம்; ஆனால், உனது வலி நிலையை அளந்தறிவது மிகவும் அரிது” என்று பாடினர் வேந்தன் முறுவலித்தான்; அரசியற் சுற்றத்தார் அளவுகடந்த மகிழ்ச்சி எய்தினர்.

இவ்வாறு சில ஆண்டுகள் கழிதலும், கொங்கு நாட்டில் பகைவர் சிலர் தோன்றி நாட்டவர்க்கு அல்லல் விளைத்தனர். அங்கிருந்து நாடு காவல் புரிந்த சேர மன்னர், அப் பகைவரை ஒடுக்கும் திறமிலராயினர். நாட்டின் பகுதிகள் பல சீரழிந்தன. குடிகள் பலர் மிக்க துன்புற்றனர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்தது. அவன் தக்கதொரு படை கொண்டு சென்று குறும்பு செய்த பகைவரை ஒடுக்கினான். கொங்கு நாட்டுத் தலைவர் பலரும் சேரமான் பக்கல் நின்று அரும் போர்


  1. புறம். 20.