பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 சேர மன்னர் வரலாறு



உடற்றி அப் பகுதிகளிற் புகுந்து அரம்பு செய்து பகையிருளை அகற்றினர். பகைவரால் அழிவுற்ற பகுதிகளைச் சேரமான் சீர்செய்து துளங்குகுடி திருத்தி வளம் பெருகச் செய்தான். மக்கட்கு வாழ்வு இன்பமாயிற்று. நீர்வளத்துக்குரிய பகுதிகளில் நெல்லும் கரும்பும் நெடும்பயன் விளைவித்தன. மலைபடு பொருளும் காடுபடு பொருளும் பெருகின. அச்சத்துக்கும் அவலத்துக்கும் இடமின்றிப் போகவே எம் மருங்கும் இன்பமே பெருகி நின்றது. அந் நிலை விளங்கக் கண்ட சான்றோர், “மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு, புத்தேள் உலகத் தற்று” எனப் புகழ்வாராயினர். இப் புகழ் தமிழகமெங்கும் தமிழ்த் தென்றல் போலப் பரவித் தழைத்தது. “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்னுமாறு எங்கும் சோற்றுவளம் பெருகிற்று.

இந் நிலையில் சேரமான் கொங்கு நாட்டில் தான் தங்கியிருந்த பாசறைக் கண்ணே பெருஞ்சோற்று விழா நடத்தினான். சேர நாட்டின் பகுதிகள் பலவற்றினின்றும் சான்றோர் பலர் வந்து குழுமினர். அவர்கட்கு வேண்டுவன பலவும் கொல்லி நாட்டுத் தலைவர்களே மிக்க அன்போடு செய்தனர். யானைகளும் தேர்களும் அணி அணியாகத் திரண்டு வந்து நின்றன. பாடி வந்த பாணர் கூத்தர் முதலிய பரிசிலர் பலர்க்கும் அவர்கள் பகை வேந்தர்பால் திறையாகப் பெற்ற செல்வங்களைப் பெருக நல்கினர். ஒருகால் தம்மைப் பாடிய அவர் நா, பிறர்பால் எப்போதும் சென்று பாடாவண்ணம் மிக்க பொருளை நல்கினர்.