பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 331



வையை யாற்று வழியே மதுரைக்குச் சென்று நெடுஞ்செழியனுக்கு உரைத்தனர். சேரமான் பாண்டி நாட்டினின்றும் நீங்கி நேரிமலை வழியாகக் குட்டநாடு சென்று சேர்ந்தான். இவ்வரலாற்றை அப்பகுதியில் வாழும் முதுவர்கள் திரித்தும் புனைந்தும் வழங்குகின்றனர் எனத் திரு. பி. ஆர். அரங்கநாத புஞ்சா அவர்கள் கூறுகின்றார்கள். இது கேரள மான்மியத்தில் வேறுபடக் கூறப்படுகிறது; இவற்றில் சேரமான் யானைக்கட்சேயின் பெயரும் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரும் குறிக்கப்படவில்லை; ஆயினும் இந் நிகழ்ச்சி மட்டில் விளக்கமாகிறது.

சேரமான் தன் நாடு சென்று சேர்ந்த செய்தி தெரிவதற்குள் பாண்டியன் அவனைத் தேடிப்பற்றிக் கொணருமாறு செய்த முயற்சிகள் பயன்படவில்லை. படை மறவருட் சிலர் சேர நாட்டு மலைக் காடுகளில் தேடிச் சென்று சேரர் வாட்படைக்கும் வேற்படைக்கும் இரையாயினர். சேரமான் யானைக்கண்சேய் தனது குட்டநாடு கடந்து பொறை நாட்டுத் தொண்டி நகரையடைந்து முன்பு போல் அரசு கட்டிலில் விளக்கமுற்றான்.

யானைகளை அகப்படுப்போர், அவை வரும் வழியில் மிக்க ஆழமான குழிகளை வெட்டி மெல்லிய கழிகளை அவற்றின் மேல் பரப்பி மண்ணைக் கொட்டி இயற்கை நிலம்போலத் தோன்றவிடுவார். அவ் வழியே வரும் யானைகள் அக் குழிகளில் வீழ்ந்துவிடின் பழகிய யானைகளைக் கொண்டு இவற்றைப் பிணித்துக் கொள்வர். வரும் யானைகளுள் சில இச் சூழ்ச்சியை