பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 335



சென்று பாடும் வாய்ப்பு இலரானார். இவர் வானநூற் புலமையிலும் சிறந்தவர். ஒரு நாள் இரவு விண்ணிலே ஒரு மீன் விழக் கண்டார். அதன் பயனாக நாட்டில் வேந்தனுக்குத் தீங்குண்டாகும் என்பது வான நூல் முடிபு. ஏழு நாள்களில் அது நிகழும் என்ற அச்சத்தால் தாமும் வேறு சில சான்றோரும் கூடி ஒவ்வொரு நாளையும் கழித்தனர். அவர் எண்ணியவாறே மீன் வீழ்ந்த ஏழாம் நாளன்று யானைக்கட்சேய் உயிர் துறந்தான். அது கண்டு பெருந்துயர் உழந்த புலவர் பெருமானான கூடலூர் கிழார்,

“ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே, அதுகண்டு,
யாமும் பிறரும் பல்வேறு இரவலர்,
பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலனாயின் நன்றுமன் தில்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் ஏழுநாள் வந்தன்று இன்றே”


என்று சொல்லி, “யானைகள் நிலத்தே கை வைத்து உறங்குகின்றன; முரசம் கண் கிழிந்து உருளுகின்றது; கொற்ற வெண்குடை கால்பந்து வீழ்கிறது; குதிரைகள் ஓய்ந்து நிற்கின்றன[1];” இத் தீக் குறிகளின் இடையே வேந்தன் “மேலோர் உலகம் எய்தினன்” என்று புலம்பினர். இவ் வேந்தன், “பகைவரைப் பணிக்கும் பேராற்றலும், பரிசிலர்க்கும் இரவலர்க்கும் அளவின்றி நல்கும் ஈகையும், மணிவரை போலும் மேனியும் உடையன்; மகளிர்க்கு உறுதுணையாகி மாண்புற்றவன்;


  1. புறம். 229.