பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338 சேர மன்னர் வரலாறு



எல்லையாகக் கொண்டிருந்தது. சோழ வேந்தருட் சிலர், காலம் வாய்க்கும்போது நமது நாட்டை யடுத்திருக்கும். கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதும் உண்டு. இவ்வகையில் கொங்குநாடு சோழர்க்கும் சேரர்க்கும் கைம்மாறுவது வழக்கம். இன்றும் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் சோழர் கல்வெட்டுகள் பல இருத்தலை நாம் காணலாம். பிற்காலத்தே கொங்குச் சோழர் என்றே ஒரு குடியினர் இருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்தது வரலாற்றாராய்ச்சியாளர் நன்கறிந்தது. இதனால், மாந்தரஞ் சேரலுக்கும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. இருவரும் போர் செய்தற்கும் சமைந்து விட்டனர்.

அந்நாளில் திருக்கோவலூரிலிருந்து மலையமான் நாட்டை ஆண்டு வந்த தேர்வண்மலையன் என்பான் அடல் வன்மையும் படை வன்மையும் மிக்கு ஏனை முடிவேந்தர் மூவரும் நன்கு மதிக்குமாறு விளங்கி னான். இவன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணைவனாயிருந்தான். ஆயினும் அவனுக்குச் சேரரும் பாண்டியரும் பகைவரல்லர். பெருநற்கிள்ளி மாந்தரனோடு போர் செய்யச் சமைந்த காலையில் தேர்வண் மலையன் அவனுக்குத் துணை செய்ய வேண்டியவனானான். மலாடரும் சோழரும் சேர்ந்து சேரர் படையொடு கடும்போர் உடற்றினர். சோழர் வலிகுன்றுமிடங்களில் மலாடர் துணை புரிந்து வெற்றி சோழர்கட்கே எய்து வித்தனர். முடிவில் சேரலர் பின்னிட்டு நீங்க வேண்டியவராயினர். வெற்றிப்புகழ் நிறைந்து மலையமான் தன் நாடு