பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 339



திரும்பி வந்தான். அவனது சீர்த்தி நாடெங்கும் பரந்தது. சான்றோர் பலர், மலையன் சிறப்பைப் பாடித் தேரும் களிறும் பிறவும் பரிசிலாகப் பெற்றுச் சென்றனர். வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்னும் சான்றோர், மலையனைக் கண்டு, “வேந்தே, சோழர்க்கும் மாந்தரனுக்கும் நடந்த போரில் வெற்றிபெற்ற சோழன் நமக்கு வெற்றி எய்துவித்தவன் இவன் அன்றோ , இவற்கு நம் நன்றியுரியது எனப் பாராட்டுகின்றான்; அது பெறாது நீங்கிய சேரமானும், வல்வேல் மலையன் துணை செய்யாதிருந்தால், நன்கு வாய்த்த இப் போரை வெல்வது நமக்கு எளிதாகும்; இவ் வகையால் இருபெரு வேந்தரும் ஒருங்கு பரவ ஒரு நீ ஆயினை, பெரும்[1],” என்று பாராட்டினர்.

நிற்க, திருவாங்கூர் நாட்டில் நெய்யாற்றங்கரை வட்டத்தில் விளங்கில் என்றோர் ஊர் உண்டு. இடைக்காலத்தே விளம்பில் எனத் திரித்து, இப்போது அது விளப்பில் என வழங்குகிறது. பண்டை நாளில் அது வேணாடு என்ற பகுதியில் மாவண் கடலன் என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய்[2] இருந்தது. அக் காலத்தில் அது செல்வங் கொழிக்கும் சிறப்புடைய வூராகவும் விளங்கிற்று. உயர்ந்தோங்கு பெருமனைகளில் வனப்பு மிக்க மகளிர் வாழ்ந்தனர். அவர்கள் தமது மனைத் தெற்றிக்கண் இருந்து தம்முடைய கைவளை யொலிப்ப விளையாடுவது இனிய காட்சி நல்கும். இவ் வேணாட்டிற்குத் தெற்கில் தென்பாண்டி நாடு


  1. புறம். 125.
  2. அகம். 47.