பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342 சேர மன்னர் வரலாறு



தூண்டிக் கொண்டு அதன் எதிரே நிற்கும் காதலியைக் கண்டு நலம் அளவளாவுங்கால் என்னை மறவாது நினைப்பாயாக’ என்று மொழிந்து முற்படச் செல்லும் உன் முயற்சி சிறப்புறுக” என அப் பாட்டில் வாழ்த்துகின்றான். அவற்றைக் கேட்டு இன்புற்ற மாந்தரன், “அந்நாளில் சிறந்த செய்யுட்களைப்பாடி மேன்மையுற்ற கபிலர், இன்று உளராயின் நன்றன்றோ“ என்று மொழிந்தான்.

வேந்தன் உரைத்த இச்சொற்களைக் கேட்டதும் இளங்கீரனார் திடுக்கிட்டார்; பலபட நினைந்து, “இவன் இது போது பாடுபவர்கள் கபிலர் போலும் புலமை யுடையரல்லர் என்று கருதுகின்றானோ? அன்றி, நம் பாட்டுகள் கபிலன் பாட்டுகளை நினைப்பிக்கின்றனவோ? வேந்தன் கருதுவது யாதோ? கபிலனை யொப்பவோ, மிகவோ, யாம் பாடுவோம் என்பதும் பொருந்தாது; ஒருகால் ஒப்பத் தோன்றினும் பழமைக்கே பெருமை காணும் உலகம் ஏலாதே” என்று நினைந்தார். “விளங்கில் என்னும் இவ்வூர்க்கு உற்ற இடுக்கண் களைந்த வேந்தே, கடுமான் பொறையனே, நின் புகழை யாங்கள் விரித்துப் பாடலுமின், விரிவிலடங்காது அது விரிந்து கொண்டே போகிறது; தொகுத்துக் கூறுவோ மெனின், அப்புகழ் முற்றும் அடங்காது எஞ்சி நிற்கிறது; அதனால் எமது புலமையுள்ளம் மயங்குகிறது. எம்மனோர்க்கு நின்புகழ் கைமுற்றுவதன்று. கபிலர் போல ஒளியுடையோர் பிறந்த இப் பரந்த உலகில் யாங்கள் பிறந்து விட்டோம்; இனி, அவர்களைப் போல ஒளியுடையராக மாட்டாமையால் இங்கே வாழேம்