பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344 சேர மன்னர் வரலாறு



சேரவேந்தர் குடிவகையில் ஒருவகையினர் இப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தனர். அவருள் சேரமான் வஞ்சன் என்பவன் சிறந்து விளங்கினான். அவன் காலத்தில் திருவாங்கூர் நாட்டு ஆனைமுடிப் பகுதியும் அவனது ஆட்சியில் இருந்தது. பண்டை நாளை வஞ்சிக் களம் பிற்காலத்தே அஞ்சைக்களம் எனத் திரிந்தாற் போல், வஞ்சன் நாடு அஞ்சன் நாடு எனத் திரிந்து வழங்குகின்றது. இவ்வாறே வயனாடு வட்டத்திலுள்ள அஞ்சன்குன்று (அஞ்சன்குன்னு) என்பதும் வஞ்சன் குன்று என்பதன் திரிபாகும். இந்த அஞ்சன் நாடு கோடைக்கானற்கு மேற்கில் உளது. ஆகவே, வடக்கே வயநாடு முதல் தெற்கே கோடைக்கானல் வரையிலுள்ள மலைப்பகுதி சேரமான் வஞ்சனுக்கு உரியதாயிருந்தது என்றும் அதற்குத் தென்னெல்லை கண்ணன் தேவன் மலையென்றும் கொள்ளலாம்.

இவ்வாறு பரந்த மலைப் பகுதிக்குத் தலைவனாக விளங்கிய வஞ்சனது தலைமையான ஊர் இன்னது எனத் தெரியவில்லை. ஆனால், வஞ்சனைப் பாடிய திருத்தாமனார் அவ்வூரைப் “பெரும் பெயர் மூதூர்[1]” என்று குறிக்கின்றார். இதனால் அது வஞ்சனுடைய முன்னோர் வாழ்ந்து வந்த தொன்மையும் புகழும் உடைய ஊர் என்பது தெளிவாகிறது. அஞ்சனது பெரும் பெயர் மூதூர் இப்போதுள்ள நீலகிரி எனக் கருதுதற்கு ஏற்ற சான்றுகள் உள்ளன. இப்போதுள்ள குடகு, பாயல் நாட்டின் பகுதியாயிருந்த போது அதன்கண் அடங்கி


  1. புறம். 398.