பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346 சேர மன்னர் வரலாறு



தொடங்கின. உடன் வந்த பாணர் யாழை இசைக்கத் திருத்தாமனார் அவனுடைய மனை முன்றிலில் பரிசிலர்க்கு என நிறுத்தப் பெற்றிருந்த பந்தரை அடைந்து அவன் மறபாண்பினைப் பாடலுற்றனர். அவ்விடம், பரிசிலர் குறுகுதற்கு எளிதேயன்றிப் பகைவர் புகமுடியாத அரிய காவல் பொருந்தியது. புலி துஞ்சும் மலை முழைஞ்சு, ஏனை விலங்கினங்கள் நுழைதற்கு அச்சம் விளைப்பதுபோல், அவனுறையும் மூதூர் பகைவர்க்குப் பேரச்சம் தந்து கொண்டிருந்தது.

தாமனார் பாடிய பாட்டைப் பாணரும் கிணைப் பொருநரும் கேட்போர் மனம் மகிழுமாறு யாழிசைத்தும் கிணைப்பறை கொட்டியும் பாடினர். பாட்டிசை சென்று உறங்கிக் கொண்டிருந்த வஞ்சனுடைய செவியகம் புகுந்து அவனைத் துயிலுணர்வித்தது. அவன் அப்பாட்டிசையைக் கேட்டு மனம் மகிழ்ந்தான். சொற் பெயரா வாய்மையும் தன்னையடைந்த இரவலர்பால் பெரருளும் உடையனாதலால், வஞ்சன் அவரது பாட்டு இசைக்கும் பொருளை நோக்கினான். இரப்புரை கலந்த அப் பாட்டு, “வேந்தே, நின்னை நினைந்து வரும் இரவலர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பிக்கும் வள்ளலாகிய நீ, எம்மைப் புறக்கணிக்காத மிக்க அருளுடையனாதல் வேண்டும்” என வேண்டிற்று.

அவன் உடனே எழுந்து போந்து திருத்தாமனாரை அன்போடு வரவேற்றான். அவர் பாடியது ஒரு சிறு பாட்டேயாயினும் அவனுக்கு அது நல்கிய மகிழ்ச்சியோ பெரிது. அதனால், அவன் முகம் மலர்ந்து அன்பு கனிய நோக்கி இன்னுரை வழங்கினான். வறுமைால் வாடி மாசு