பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன்கோதை 353



நாடு குதிரை மலையைத் தன் அகத்தே கொண்டிருந்தது. குதிரைமலை இப்போது சஞ்சபருவதமென ஒரு சிலரால் மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும், குதிரை மூக்கு என்ற பழைய தமிழ்ப் பெயருடன் தென் கன்னடம் மாவட்டத்தில் உப்பினங்காடி வட்டத்தில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் மர்க்காரா என்றும், வடகரை படகரா என்றும் வானவன் தோட்டி மானன்டாடி என்று உருத்திரிந்தும் வழங்குகின்றன. வடமொழியாளர் குதிரை மலையைச் சஞ்ச பருவதம் என்றும், மேற்கு மலைத் தொடரைச் சஃயாத்திரி என்றும் மொழி பெயர்த்துள்ளனர்; ஆனால் மக்கள் வழக்குக்கு வரவில்லை . மேலும், இம்மலை தென்கன்னடத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கிறது. இதன்மேற் பெய்யும் மழை ஒருபால் கிருஷ்ணையாற்றையும் ஒருபால் காவிரியாற்றையும் அடைகிறது. இம் மலையை மேலைக்கடலிலிருந்து பார்ப்போமாயின், இது குதிரையின் முகம்போலக் காட்சி தருவது பற்றிக் குதிரை மலையெனப்படுவ தாயிற்று [1].

பிட்டனுடைய இந்தக் குடநாடு மலை நிறைந்தது. மலையிடையிலும் சரிவிலும் மூங்கில் அடர வளர்ந்து செறிந்திருக்கும். மலைச் சரிவுகளில் அருவி நீர் வீழ்ந்து பெருமுழக்கம் செய்யும். காட்டாற்றின் கரையில் கமுகும் வாழையும் வளர்ந்திருக்கும். அவற்றின் இடையே மிளகுக் கொடிகள் வளர்ந்து அம் மரங்களைச் சுற்றிக்


  1. Imp. Gazett. Madras. Vol. ii. p. 395-6.